உலக நாடுகளிலேயே அமெரிக்கா கொரோனா தொற்றால் பல கடும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக ஹாலிவுட் கலைஞர்கள், நடிகர், நடிகைகள் என பலரும் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது பிரபல ஹாலிவுட் ஹீரோ டிவைன் ஜான்சன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு உறுதிபடுத்தியுள்ளார். 

மல்யுத்த வீரராக இருந்து தற்போது ஹாலிவுட் திரையுலகின் ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வருபவர் டிவைன் ஜான்சன். அதிகம் சம்பளம் வாங்கும் பிரபலங்கள் பட்டியலில் போர்ப்ஸ் பத்திரிகையில் இடம் பிடிக்கும் அளவிற்கு சம்பளம் வாங்குகிறார். அதுமட்டுமின்றி உலகம் முழுவதும் இவருக்கான ரசிகர்கள் பட்டாளம் எக்கச்சக்கம். இந்நிலையில் கொரோனா தொற்று குறித்து ராக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், தனக்கும் தனது மனைவி லாரேன்(35) மற்றும் தனது மகள்களுக்கும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு இது கொரோனா உறுதிசெய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார்.  மேலும் இது மிகவும் சவாலான காலம் என குறிப்பிட்டுள்ள அவர், தானும் தனது குடும்பத்தினரும் கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்டு வருவோம் என்றும் உறுதியாக தெரிவித்தார். 

தற்போது நானும், குடும்பத்தினரும் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு விட்டோம். ஆரோக்கியமாக இருக்கிறோம். இதற்காக கடவுளுக்கு நன்றி. ஆரோக்கியம், பாதுகாப்பில் நான் அதிக அக்கறையுடன் இருப்பவன். உங்களுக்கு வேண்டியவர்கள் யாராவது வீட்டிற்கு வந்தால் அவர்களை கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சொல்லுங்கள். அதில் பாசிட்டிவ் என தெரிந்தால் அவர்களை விட்டு தள்ளி இருங்கள். உங்களுடைய குடும்பத்தினரை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.