'காந்தா' படத்தின் ரிலீஸைத் தடுக்கக் கோரி எம்.கே. தியாகராஜ பாகவதரின் குடும்பத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதால் அப்படத்திற்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
Dulquer Salmaan Kaantha film controversy : எம்.கே. தியாகராஜ பாகவதரை அவதூறாக சித்தரிப்பதாகக் கூறி, 'காந்தா' படத்திற்கும் அதன் தயாரிப்பாளர் துல்கர் சல்மானுக்கும் எதிராக சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தியாகராஜ பாகவதரின் குடும்பத்தினர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். படத்தின் ரிலீஸை தடுக்க வேண்டும் என்றும், படத்தின் கதை தங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை அல்லது அனுமதி பெறப்படவில்லை என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு இம்மாதம் 18ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
நவம்பர் 14ஆம் தேதி காந்தா திரைப்படம் ரிலீஸ் ஆக இருந்தது. தற்போது இந்த வழக்கால் அப்படத்தின் ரிலீசுக்கு சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. இப்படத்தை செல்வமணி செல்வராஜ் எழுதி இயக்கி உள்ளார். இப்படத்தில் துல்கர் சல்மான் ஹோடியாக பாக்யஸ்ரீ போர்சே நடித்திருக்கிறார். மேலும் ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பகவதி பெருமாள், நிழல்கள் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதில் சமுத்திரக்கனி அய்யா என்கிற கதாபாத்திரத்திலும், ராணா டகுபதி போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருக்கின்றனர்.

காந்தா படத்திற்கு தடை கோரி வழக்கு
காந்தா திரைப்படத்தை துல்கர் சல்மானும், ராணா டகுபதியும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தை தமிழ் சினிமாவின் முதல் சூப்பர்ஸ்டாரான தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கி உள்ளனர். தியாகராய பாகவதராக துல்கர் சல்மான் நடித்திருக்கிறார். இந்தியாவிலேயே முதன்முதலில் பென்ஸ் கார் வாங்கிய நடிகரும் பாகவதர் தான். தங்கத்தட்டில் சாப்பிடும் அளவுக்கு செல்வ செழிப்போடு இருந்த அவர், இறுதியில் அனைத்தையும் இழந்து சிறைவாசம் அனுபவித்தார்.
தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை அடிப்படையாக வைத்து தான் காந்தா திரைப்படம் உருவாகிறது. தங்களின் அனுமதியின்றி இப்படத்தை உருவாக்கி இருப்பதாக கூறி தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் தியாகராஜ பாகவதரின் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்திருப்பதால், காந்தா திரைப்படம் நவம்பர் 14ந் தேதி ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.
