நான்கு தினங்களுக்கு முன்பு பிரபல கேமரா மேன் ஸ்டில்ஸ் சிவா பலியான சம்பவத்தில் அந்த காரை ஓட்டி வந்த டிரைவர், நடிகர் தவசி குடிபோதையில் இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக சிவா குடும்பத்தினர் புகார் கொடுத்தால் நடிகர் தவசி கைதாகக்கூடும் என்று தெரிகிறது.

கடந்த 2ம் தேதி இரவு, படப்பிடிப்பு முடிந்து திரும்பும் வழியில் ஏற்பட்ட பயங்கர கார் விபத்தில் பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் சூப்பர் குட் சிவா காலமானார். அவருடன் பயணம் செய்த குணச்சித்திர நடிகர் தவசி படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அந்த விபத்து ஏற்பட்டதற்கு நடிகரும், அரைகுறை டிரைவருமான தவசியே காரணமென்று கூறப்படுகிறது. யூனிட்டைச் சேர்ந்தவர்கள் எவ்வளவோ தடுத்தும் கேளாமல் காரை குடிபோதையில் ஓட்டியிருக்கிறார் தவசி.

அச்சம்பவம் குறித்து தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசிய சிவாவின் மூத்த மகன் அபிஷேக்,...அப்பாவோட இறப்பு எங்க குடும்பத்துக்கு பேரிழப்பு. அப்பா தான் எங்களுடைய குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். நான் இப்போ தான் காலேஜ் முடிச்சிட்டு வேலைக்குப் போக ஆரம்பிச்சிருக்கேன். தம்பி ப்ளஸ் டூ படிக்கிறான். அப்பா வேலை விஷயமா ஒரு வாரத்துக்கு முன்னாடி தேனி கிளம்பியிருக்கார். நான் வேலை முடிச்சிட்டு வீட்டுக்கு வந்தப்போ தான் அப்பா ஊருக்குப் போயிருக்கிற விஷயமே தெரியும். ஆனா, அப்பா போன்ல பேசினார். ஆறாம் தேதி வீட்டுக்கு வந்திருவேன்னு சொன்னார். ஆனா, கடைசில அவருடைய சடலத்தை தான் பார்க்க முடிஞ்சது. 

அப்பா ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்து யூனிட் கார்ல தான் ரூமுக்குப் போறதா இருந்தது. ஆனா, துணை நடிகர் தவசி தான் அவருடைய கார்ல போகலாம்னு அப்பாவை வலுக்கட்டாயமா கூப்பிட்டிருக்கார். காரையும் தவசி தான் ஓட்டியிருக்கார். அதுவும் அவர் அந்த நேரத்துல குடிபோதைல இருந்ததா சொல்றாங்க. அவருக்கு காரும் சரியா ஓட்டத் தெரியாதுனு மத்தவங்க சொல்லி கேள்விப்பட்டேன். அப்பா போன காருக்கு முன்னாடி யூனிட் கார் போயிட்டிருந்திருக்கு. அதை ஓவர்டேக் பண்றேன்னு தவசி வேகமா கார் ஓட்டியிருக்கார். அப்போ தான் கார் கன்ட்ரோலை இழந்து பள்ளத்துல விழுந்திருக்கு. இதை இயக்குநரும் நேரில் பார்த்தவங்க சிலரும் சொன்னாங்க. அப்பாவுக்கு பயத்துல இதயமே வெடிச்சிருந்திருக்கு. காயம் நிறைய ஏற்பட்டு அப்பா இறந்திருக்கார். அப்பா வருவார்னு எதிர்பார்த்திருந்த எங்களுக்கு அவர் இறந்துட்டார்னு போன் கால் மட்டும் தான் வந்துச்சு. குடிபோதையில் யாரும் கார் ஓட்டிட்டுப் போக வேண்டாம்னு யூனிட்ல இருந்த நிறைய பேர் சொன்னாங்களாம். ஆனா, தவசி கேட்காம போயிருந்திருக்கார். எங்க அப்பாவுக்கு காரும் ஓட்டத் தெரியாது.அப்பாவுடைய இறுதிச் சடங்கு அப்பாவுடைய சொந்த ஊர் மதுரையில் தான் நடந்தது. அப்பா உடலை அஞ்சு மணி நேரத்துல அடக்கம் பண்ணிட்டோம். 

அதனால, சினிமாத் துறையில் இருந்த பலரும் அப்பாவுடைய இறுதிச் சடங்குல கலந்துக்க முடியல. அப்பாவுடைய நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்துக்கிட்டாங்க. விஜய் சார் கூட அப்பா வேலை பார்த்திருக்கார். அவரைத் தொடர்பு கொள்ள முயற்சி பண்ணோம். ஆனா, அவரைத் தொடர்பு கொள்ள முடியல. அஜித் சாரின் உதவியாளர் நேரில் வந்து துக்கம் விசாரிச்சிட்டுப் போனார்.அப்பா இறப்பு எதிர்பாரமா நடந்த ஒண்ணு தான். எனக்கு தவசி மேல நிறைய கோபம் இருக்கு. கார் ஓட்டத் தெரியாதவர் எதுக்காக அப்பாவை கார்ல கூப்பிட்டுட்டுப் போகணும்? தவசி கூட அப்பா கார்ல போகமா இருந்திருந்தா அவர் உயிரோட இருந்திருப்பார். அப்பாவும் தவசி கூட போக விருப்பம் இல்லாம தான் இருந்திருக்கார். தவசி தான் கையைப் பிடிச்சு கார்ல கூப்பிட்டுப் போயிருக்கார். அப்பாவுடைய சில டாக்குமென்ட்ஸ் வந்ததுக்குப் பிறகு இது சம்பந்தமா போலீஸ்ல புகார் கொடுக்கலாம்னு இருக்கோம்’என்கிறார்.