“நடிகைகளின் அனுமதி இல்லாமல் அவர்களைத் தொடுவதும், அவர்களுக்கு கை கொடுக்க வேண்டும் என நினைப்பதும் ஏன்?” என நடிகை நித்யா மேனன் கேள்வி எழுப்பி உள்ளார்.
‘திருச்சிற்றம்பலம்’ படம் மூலம் கவனம் பெற்ற நித்யா மேனன்
குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் நடிக்கத் துவங்கி தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் நித்யா மேனன். தமிழில் சில படங்களே நடித்திருந்தாலும் தன்னுடைய ஆழமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இவர் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பாராட்டை வாங்கிக் கொடுத்தது. அந்த படத்தில் நித்யா மேனனின் ஷோபனா கதாபாத்திரம் அனைவரின் மனதிலும் இடம் பிடித்தது.
நித்யா மேனன் நடித்து வரும் படங்கள்
தற்போது நித்யா மேனன் மீண்டும் தனுஷுடன் இணைந்து ‘இட்லி கடை’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய் சேதுபதி உடன் ‘தலைவன் தலைவி’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார். ‘தலைவன் தலைவி’ திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இதில் நித்யா மேனனும் விஜய் சேதுபதியும் பேசும் வசனத்தை பலரும் ரீ கிரியேட் செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் நித்யா மேனனின் சமீபத்திய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகைகளை எளிதாக தொடலாமா? நித்யா மேனன் ஆவேசம்
பேட்டியில் அவர் நடிகைகள் படும் கஷ்டங்கள் குறித்து பேசினார். “ஒரு சாதாரண பெண்ணிடம் நடந்து கொள்வது போல கூட நடிகைகளிடம் யாரும் நடந்து கொள்வதில்லை. நாங்கள் நடிகர்கள் என்பதற்காகவே அனைவரும் எளிதாக எங்களை தொடலாம் என நினைக்கிறார்கள். ஒரு நிகழ்ச்சிக்கு போனால் ரசிகர்கள் கையை குடுங்க என்று கேட்கிறார்கள். ஆனால் இந்த கேள்வியை சாதாரண பெண்ணிடம் யாரும் கேட்க மாட்டார்கள். ஒரு நடிகையை எளிதாக தொடலாம் என்கிற எண்ணம் தான் பலரிடமும் இருக்கிறது.
தொட்டுப் பேசுவது எனக்கு பிடிக்காது
பொதுவாக தொட்டுப் பேசுவது எனக்கு பிடிக்காது. யாராவது என்னிடம் கை கொடுக்க கேட்டால் நான் அதை மறுத்து இருக்கிறேன். இதை சமூக வலைதளங்களில் பெரிய பிரச்சனையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு யாருக்கு கை கொடுக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அவர்களுக்குத்தான் நான் கை கொடுக்க முடியும்?” என நித்யா மேனன் பேசியிருந்தார். அவரின் இந்த கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
நித்யா மேனனின் சர்ச்சை வீடியோ
சில நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் நித்யா மேனன் கலந்து கொண்ட போது ரசிகர் ஒருவர் கை கொடுக்கச் சொல்லி கேட்பார். ஆனால் நித்யா மேனன் அவரை வணங்கி விட்டு தனக்கு ஜலதோஷம் பிடித்திருப்பதாக கூறிவிட்டு செல்வார். பிறகு மேடையில் இருந்த நடிகரை கட்டி அணைத்து கை கொடுத்திருப்பார். இந்த இந்த வீடியோவை பகிர்ந்து நெட்டிசன்கள் நித்யா மேனனை விமர்சித்து வந்த நிலையில், அதற்கு இந்த பேட்டி மூலம் அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
