ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள "தர்பார்" படம், பொங்கல் விருந்தாக வரும் 9ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். அனிருத் இசையில் வெளியான "தர்பார்" படத்தின் பாடல்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் பட்டையைக் கிளப்பி வருகின்றன. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 167வது படமான இதை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு மிகப்பெரிய அளவில் செலவு செய்யப்பட்டுள்ளதால் புரோமோஷன் வேலைகளில் லைகா நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. 

"கபாலி" படத்திற்கு பிறகு, "தர்பார்" படத்தின் போஸ்டர்கள் விமானத்தில் ஒட்டப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டன. மேலும் உலகம் முழுவதும் 7 ஆயிரம் தியேட்டர்களில் தர்பார் படம் ரிலீஸ் ஆக உள்ளது. ஒரு பக்கம் சூப்பர் ஸ்டார் ரசிகர்களும் தினுசு, தினுசாக புரோமோஷன் வேலைகளில் இறங்கியுள்ளனர். 

இதனிடையே தர்பார் படத்தின் புரோமோஷனுக்காக மட்டும் லைகா நிறுவனம் இதுவரை 6 முதல் 7 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை கேள்விப்பட்ட மற்ற நடிகர்களின் ரசிகர்கள் வாய் பிளந்து நிற்க, "சூப்பர் ஸ்டார் படம்னா சும்மாவா, கெத்து காட்டுவோம் இல்ல" என தலைவர் ஃபேன்ஸ் காலரை தூக்கிவிட்டு கொண்டாடி வருகின்றனர்.