ரோமியோ ஜூலியட், போகன் படங்களைத் தொடர்ந்து 3வது முறையாக லக்‌ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள திரைப்படம் பூமி. ஜெயம் ரவியின் 25வது படமான இதில் நிதி அகர்வால், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். மே 1-ம் தேதி வெளியாக இருந்த இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப் போனது.

இதனிடையே பூமி திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில்  பொங்கல் அன்று வெளியாக உள்ளதாக நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய அறிக்கையில் தெரிவித்திருந்தார். இன்று காலை படம் ஓடிடியில் வெளியான சில மணி நேரங்களிலேயே பைரசி இணையதளத்தில் கசிந்துள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

இதனிடையே ஓடிடி தளத்தில் வெளியான பூமி திரைப்படம் எத்தனை கோடிக்கு விலை போனது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில் பூமி படக்குழுவினர் 40 கோடி கேட்டதாகவும், அதனால் ஓடிடி விற்பனை தடைபட்டதாகவும் கூறப்பட்டது. அதன் பின்னர் இணையம் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையோடு சேர்த்து 30 கோடி ரூபாய்க்கு மட்டுமே விற்பனையானதாக கூறப்படுகிறது.