ஹூட் செயலிக்காக இப்படியா பண்ணுவீங்க.? புனீத் ராஜ்குமார் இரங்கலில் ரஜினியை சாடிய ரசிகர்கள்.!
தாமதமாக தெரிந்திருந்தாலும், தனக்கு போன் செய்து வேதனையை ரஜினி வெளிப்படுத்தியதாக புனீத் ராஜ்குமாரின் சகோதரரும் நடிகருமான சிவராஜ்குமார் தெரிவித்திருந்தார்.
கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த், தன்னுடைய மகள் தொடங்கிய இரங்கலை ஹூட் செயலில் தெரிவித்ததை சமூக ஊடகங்களில் சிலர் சர்ச்சை ஆக்கியிருக்கிறார்கள்.
கன்னட திரை உலகின் பவர் ஸ்டார் என்று ரசிகர்களால் ஆராதிக்கப்பட்ட நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த அக்டோபர் மாதம் 29 அன்று உடற்பயிற்சிக் கூடத்தில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். புனீத்தின் மரணம் கன்னட திரை உலகையும் கர்நாடக மக்களையும் அதிர்ச்சியிலும் கடும் சோகத்திலும் ஆழ்த்தியது. அவருடைய உடல் முழு அரசு மரியாதையுடன் காண்டீரவா ஸ்டூடியோவில் உள்ள அவருடைய தந்தையும் நடிகருமான ராஜ்குமார், தாய் பர்வதம்மாள் சமாதிக்கு அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. அவருடைய நினைவிடத்துக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு புனீத் ராஜ்குமாரின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் இரங்கல் பதிவையும், அவருடைய மகள் தொடங்கிய ஹூட் செயலியில் குரல் வழியாக இரங்கலையும் த்ரிவித்திருந்தார். “நான் மருத்துவமனையில் இருந்த போது புனித் அகால மரணம் அடைந்து விட்டார். அந்த செய்தி எனக்கு இரண்டு நாட்களுக்கு கழித்துதான் சொன்னார்கள். அதை கேட்டு நான் மிகமிக வேதனை அடைந்தேன். என் கண்ணுக்கு முன்னால் வளர்ந்த குழந்தை, அன்பும் பண்பும் கொண்ட அருமையான குழந்தை, புகழின் உச்சியில் இருக்கும் நேரத்தில் இவ்வளவு சின்ன வயதில் அவர் மறைந்திருக்கிறார்.
அவர் இழப்பை, கன்னட சினிமா துறையால் ஈடு செய்யவே முடியாது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகளே இல்லை. புனித் ஆத்மா சாந்தி அடையட்டும்.” என்று தெரிவித்திருந்தார். புனீத் இறந்து 10 நாட்களுக்குப் பிறகு ரஜினி இரங்கல் தெரிவித்ததற்கு சமூக ஊடங்களில் விமர்சிக்கவும் செய்தனர். தாமதமாக தெரிந்திருந்தாலும், தனக்கு போன் செய்து வேதனையை ரஜினி வெளிப்படுத்தியதாக புனீத் ராஜ்குமாரின் சகோதரரும் நடிகருமான சிவராஜ்குமார் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தன் மகளின் 'ஹூட்' செயலியை பிரபலப்படுத்தும் நோக்கி, புனீத் ராஜ்குமாரின் இரங்கல் செய்தியை அவர் பயன்படுத்தி கொண்டுள்ளார் என சமூக ஊடங்களில் நெட்டிசன்கள் சிலர் விமர்சித்து வருகிறார்கள். அவர்களுக்கு ரஜினி ரசிகர்கள் சிலரும் பதிலளித்திருக்கிறார்கள். சமூக ஊடகங்களில் இரங்கல் செய்திகூட சர்ச்சையாகி இருப்பது பலரையும் முகம் சுழிக்க வைத்திருக்கிறது.