பிகில் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும் சாந்தனு, மாளவிகா மோகனன், கெளரி கிஷன், ஆண்ட்ரியா உட்பட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது. சென்னை, டெல்லி, நெய்வேலி, கர்நாடகா என வளைத்து, வளைத்து பல கட்டங்களில் ஷூட்டிங்கை நடத்திய படக்குழு கடந்த வாரம் படப்பிடிப்பை நிறைவு செய்தது. 

விஜய் சேதுபதி, தளபதி விஜய்க்கு கொடுத்த ஸ்பெஷல் முத்தத்தோடு படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு, அந்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட தாறுமாறு வைரலானது. இந்நிலையில் அந்த படத்தில் கலை இயக்குநராக பணியாற்றிய சதீஷ்குமார் பிரபல வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், மாஸ்டர் படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். 

அதில் முதலில் அவர் கூறியது அவரது ஆர்ட் டிபார்ட்மெண்டைப் பற்றி தான். மாஸ்டர் படத்தில் செட் எல்லாம் ரியலாக இருக்க வேண்டும் என்பதற்காக அதிகமாக மெனக்கெட்டுள்ளனர். குறிப்பாக கர்நாடகாவில் போட்ட ஜெயில் செட்டைப் பார்த்து நிஜ ஜெயில் என்று நினைத்துவிட்டேன் என்று விஜய் சிரித்தாராம். 

மாஸ்டர் படத்தில் விஜய், விஜய் சேதுபதி ஒன்றாக நடித்த காட்சிகள் அப்படி இருக்குமாம். அதிலும் பைட் சீன் எல்லாம் வேற லெவலில் இருக்குமாம். இரண்டு பேரும் சேர்ந்து ஸ்டண்ட் செய்த காட்சிகள் அனல் பறக்கும் என்று கூறியிருக்கிறார். 

அதில் அவர் கூறியிருக்கும் ஹைலைட்டே விஜய் - விஜய் சேதுபதி கிஸ் மேட்டர் தான். ஏற்கனவே கைதி படத்தில் லோகேஷ் கனகராஜ் உடன் பணியாற்றியவர் என்பதால் இவரது பிறந்தநாள் டைரக்டருக்கு நல்லாவே தெரியுமாம். மாஸ்டர் ஷூட்டிங் ஆரம்பித்ததில் இருந்தே படக்குழுவில் யார், யாருக்கெல்லாம் பிறந்தநாளே அப்போதெல்லாம் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அப்படி இவரது பிறந்தநாளின் போது மாஸ்டர் செட்டில் கேக் வெட்டியுள்ளனர். 

அப்போது சதீஷ்குமார் விஜய் சேதுபதியிடம் ஒரு முத்தம் என கேட்க அவரும், வழக்கம் போல கன்னத்தில் நச்சென முத்தம் பதித்துள்ளார். இந்த இன்ப களோபரம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, யாரோ விஜய்க்கு இன்னும் விஜய் சேதுபதி முத்தம் கொடுக்காததை நினைவுபடுத்தியுள்ளனர். உடனே விஜய்க்கு விஜய் சேதுபதி தனது பேவரைட் முத்தத்தை கொடுத்து படக்குழுவினரை செம்ம ஹாப்பியாக்கியுள்ளார். அந்த போட்டோ தான் சோசியல் மீடியாவில் வெளியாகி தாறுமாறு வைரலானது.