உலக நாடுகளில் வல்லரசு முதல் வளரும் நாடுகள் வரை அனைத்து நாட்டு மக்களும் அந்த ஒரே ஒரு வார்த்தையை கேட்டால் மரண பீதி அடைகின்றனர். அது தான் கொரோனா வைரஸ். சீனாவில் ஆரம்பித்த இந்த வைரஸ் தாக்கம் இப்போது உலக நாடுகள் முழுவதும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இன்று வரை இந்த வைரஸ் பாதிப்பால் ஏழாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 150க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸ், இந்தியாவையும் விட்டு வைக்காவில்லை. இங்கு கொரோனாவால் இதுவரை 120க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 3 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வரும் மத்திய, மாநில அரசுகள் தேவையில்லாமல் பொதுமக்கள் அதிக அளவில் ஒன்று கூட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி பல மாநிலங்களில் மக்கள் ஒன்று கூடும் இடங்களான மால், சினிமா தியேட்டர்கள், பூங்காக்கள் ஆகியன மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் வரும் 31ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோன்று நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து படப்பிடிப்புகளையும் ஒத்திவைப்பதாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான பெப்சி அறிவித்துள்ளது. அதேபோன்று எந்த வித சினிமா, சீரியல் போன்ற படப்பிடிப்புகளிலும் ஈடுபடக்கூடாது என்று இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 


இந்நிலையில் பாலிவுட் முதல் கோலிவுட் வரை படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே திரைப்பிரபலங்கள் பலரும் கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்ளும் படி தங்களது ரசிகர்களுக்கு சோசியல் மீடியா மூலமாக அட்வைஸ் செய்து வருகின்றனர். 

ஸ்ரீவில்லிபுத்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சித்தார்த், அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுங்கள், யாருடனும் நெருங்கி பழகாதீர்கள், கொஞ்ச காலத்திற்கு கை கொடுப்பது, கட்டிப்பிடிப்பது போன்றவற்றை தவிருங்கள். கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்த்துவிடுங்கள். இதையெல்லாம் செய்தாலே மிகவும் பயப்படக்கூடிய நிலை என்று ஒன்று வராது என்று தெரிவித்துள்ளார்.