‘அசுரன்’படத்தை தானே விரும்பிப் பார்த்து இயக்குநரைப் பாராட்டிய கமல், முழுமூச்சாக வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கத் துடிக்கும் சூர்யா, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பரோட்டா சூரி ஆகிய மூவரில் யாரை வெற்றிமாறன் தனது அடுத்த பட ஹீரோவாக அறிவிக்க இருக்கிறார் என்கிற கேள்விகள் கோடம்பாக்கத்தில் எழத்தொடங்கியுள்ளன.

100கோடியை தாண்டியுள்ள வசூலை எட்டியுள்ள வெற்றிமாறனின் அசுரன் படத்தால் அவருடைய அடுத்த படத்துக்கான எதிர்பார்ப்பு பல மடங்கு எகிறியுள்ளது. இந்நிலையில் வெற்றிமாறன் படத்தைத் தயாரிக்க இருப்பவர் எல்ரெட் குமார் என்பது உறுதியாகியுள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர்,...“ஒரு தயாரிப்பாளர் என்பதற்கும் மேலாக சினிமா ரசிகன் என்ற முறையில் வெற்றி மாறன் போன்ற இயக்குநருடன் பணி புரிவது எனக்கு பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. காரணம், கலையம்சம் மிக்க படங்களுக்கும், வணிக ரீதியான படங்களுக்கும் உள்ள இடைவெளியை நிரப்பும் பாலமாக இருக்கும் அரிதான இயக்குநர்களில் வெற்றி மாறனும் ஒருவர்.

அவரது படங்களின் உள்ளடக்கம் தனித்தன்மை மிக்கதாக இருப்பதுடன், வணிக வெற்றிக்குத் தேவையான அம்சங்களைக் கொண்டதாகவும் இருப்பதால்தான், தமிழ் ரசிகர்களை மட்டுமின்றி மொழி எல்லைகளைத் தாண்டி அனைத்து ரசிகர்களையும் கவர்கிறது. இதற்கான சமீபத்திய சான்றாக அமைந்திருக்கும் அசுரன் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து, பாக்ஸ் ஆபிஸில் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறது.தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றி மாறன் மற்றும் அவரது குழுவுடன் இணைந்து மற்றுமொரு மிகச் சிறந்த படத்தைத் தருவதற்கு மகிழ்வுடன் தயாராகிக்கொண்டிருக்கிறேன். வெகு விரைவில் இந்தப் படத்தில் நடிக்கும் நடிக நடிகையர் மற்றும் தொழில் நுடபக்கலைஞர்கள் ஆகியவற்றுடன் மேலதிக விவரங்களை அறிவிக்கிறோம்..!” என்று ஒரு செய்திக் குறிப்பு வெளியிட்டிருக்கிறார்.

இந்நிலையில் வெற்றிமாறனின் அடுத்த ஹீரோ யார் என்பது குறித்து பரபரப்பு நிலவுகிறது. இவரது இயக்கத்தில் நடிக்க கமல் மிக ஆர்வமாக இருப்பதாலேயே தனது பரம எதிரியான தாணுவின் தயாரிப்பு என்பதையும் மீறி அவர் படம் பார்த்ததாக சொல்லப்படுகிறது. அடுத்து ‘அசுரன்’ரிலீஸான தினத்தன்றே படம் பார்த்த சூர்யா வெற்றிமாறனின் இயக்கத்தில் நடிக்க பல பல்டிகளை அடித்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் ‘என்னுடைய அடுத்த ஹீரோ இவர்தான்’என்று வெற்றிமாறனாலேயே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட பரோட்டா சூரி காத்திருக்கிறார். இந்த மூவரில் யாரை வைத்து தனது அடுத்த படத்தை வெற்றிமாறன் இயக்கப்போகிறாரோ தெரியவில்லை.