அவ்வப்போது நல்ல நாவல்களும் படமாக்கப்பட்டு வருகின்றன என்று தமிழ் இலக்கியவாதிகள் ஆறுதல் அடைந்துகொண்டிருந்த நிலையில் ‘அசுரன்’படக் கதை குறித்து ஒரு பெரும் அதிர்ச்சி செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன். அதாவது அவர் எடுத்துக்கொண்ட நாவலின் கதையில் இருந்த கருத்தை அப்படியே உல்டாவாக்கியிருக்கிறாராம் படத்தில்.

சாகித்ய அகாடமி விருதுபெற்ற பூமணியின் ‘வெக்கை’நாவலத்தான் அசுரனாகப் படமாக்கி முடித்திருக்கிறார் வெற்றிமாறன். தனுஷ், மஞ்சு வாரியர் நடிப்பில், ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கும் இப்படம் தீபாவளிக்கு இரு வாரங்கள் முன்னதாக நவம்பர் எட்டாம் தேதியன்று ரிலீஸாகவிருக்கிறது. அதையொட்டி படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் நாவலின் கதையை அப்படியே தலைகீழாக மாற்றி எடுத்திருப்பதாக அதிர்ச்சி அளித்திருக்கிறார் வெற்றிமாறன்.

பூமணியின் கதையில் ஒரு கொலைக்கு இன்னொரு கொலை பழிக்குப் பழியாக செய்யப்பட்டு அதை அக்குடும்பமே கொண்டாடும் மனநிலையில் இருக்கும். அந்தக் கருவை அப்படியே மாற்றி பழிக்குப் பழியாக கொலை செய்வதால் ஒரு குடும்பம் எவ்வளவு நிம்மதியை இழக்கிறது என்று மாற்றியிருக்கிறாராம் வெற்றிமாறன். இறுதிக்கட்டப் பணிகளில் ஈடுபட்டவர்களின் கூற்றுப்படி ‘வடசென்னை’படத்தில் தவறவிட்ட தேசிய விருதுகளை இப்படத்தில் தனுஷும் வெற்றிமாறனும் சேர்ந்து கைப்பற்றுவார்கள் என்று தெரிகிறது.