Asianet News TamilAsianet News Tamil

யாராவது நயன்தாராவிற்கு சிலை வைத்தால் திறந்து வைக்க நான் வரேன்... அறம் பார்த்து அசந்து போன இயக்குனர் நெகிழ்ச்சி...

Director vasanthabalan Facebook post about Aram Nayanthara
Director vasanthabalan Facebook post about Aram Nayanthara
Author
First Published Nov 15, 2017, 12:51 PM IST


"இப்போது யாராவது நயன்தாராவிற்கு சிலை வைத்தால் திறந்து வைக்க நான் வருகிறேன்" என்று இயக்குனர் வசந்த பாலன் தெரிவித்துள்ளார். 

கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் வெளியான அறம் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது. நயன்தாராவின் நடிப்பு, கோபி நாயனாரின் வசனம் இயக்கம் என அடித்தட்டு மக்களின் வாழ்க்கையையும் இன்றைய அரசியலின் உண்மையை பேசுகிறது அறம்.

இந்நிலையில் ஆறாம் படம் குறித்து இயக்குனர் வசந்தபாலன் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது; 

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு தமிழ் சினிமா என்னை கலங்கடித்துள்ளது. தன் முதல்படத்தில் எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என்பதற்காக எத்தனை அல்பமான யோசனைகள் தோன்றும் என்பது எனக்கு தெரியும். அதை மீறி சமுதாயத்திற்கு தேவையான கருத்துடன் கூடிய கதையை தான் அழுத்தமாக முன் வைப்பேன் என்கிற திமிரோடு நெஞ்சில் நிஜ துணிச்சலோடு இயக்குநர் கோபி நயினார் தன் முதல் படத்தை நம் முன் ரத்த படையலாக்குகிறார்.

இறுக தழுவி கொள்ள தோன்றுகிறது. படம் துவங்கத்தில் அறம் என்கிற டைட்டில் லோகோ கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் ஆயிரம் கைகள் தன்னை தூக்கி விட ஏங்கி கை நீட்டும். அத்தனை கைகளும் ஒன்றாகி ஓரே கையாகி நீட்ட மேலிருந்து ஒரு பெண்ணின் கை அந்த பிஞ்சுக்கையை தூக்க நானும் திரைக்குள் இழுத்து செல்லப்பட்டேன். அப்போதே மனது நல்ல படத்தை பார்க்க போகிறோம் என்ற மகிழ்ச்சியில் துள்ள துவங்கியது.

Director vasanthabalan Facebook post about Aram Nayanthara

விண்வெளிக்கு ராக்கெட் ஏவும் தளத்திற்கு பக்கத்தில் உள்ள காட்டூர் கிராமம். இப்படியான ஊரில் தான் கதை நடக்குகிறது என்று தேர்வு செய்தது தான் இது முக்கியமான அரசியல் திரைப்படமாக மாறியிருக்கிறது. இங்கேயே திரைக்கதை ஆசிரியர் கோபி முதல் சிக்ஸர் அடித்துள்ளார். போலியோ சொட்டு மருந்து ஊற்றுகிற புகைப்படத்தில் கூட அரசின் அலட்சியம் நாட்டின் அவலம் உலகிற்கு தெரிந்து விடக் கூடாது என்பதில் அரசு அதிகாரிகள் எத்தனை கவனமாக இருக்கிறார்கள் என்பதை பதிவு பண்ணத் துவங்கும் போதே அரசின் மானம் கப்பலேற போகிறது என்று தோன்ற துவங்குகிறது.

குழிக்குள் விழுகிற தன்சிகா என்று அழைக்கப்படுகிற அந்த குழந்தை தேர்வு அற்புதம். ஏழ்மையான தோற்றம் கொண்ட குழந்தை. அந்த குழந்தையின் பற்களை கவனித்தால் தெரியும் பூச்சி அரிப்பு ஏற்பட்ட காவி படிந்த பால் பற்கள். ஆங்கில சினிமாவில் நடிகர்கள் தேர்வு என்பது எத்தனை முக்கியம் என்று வகுப்பெடுப்பார்கள்.

Director vasanthabalan Facebook post about Aram Nayanthara

கோபி என்கிற மண்ணின் மைந்தன் படம் எடுக்க வந்ததால் மிக எளிமையாக அந்த தன்சிகாவை கையை பிடித்துக் கொண்டு படத்திற்குள் அழைத்து வந்து விட்டார். தன்சிகா மட்டுமல்ல படத்தில் நடித்த அத்தனை துணை இணை கதாபாத்திரங்களின் தேர்வு மிக அற்புதம். தன்சிகாவின் இரு அண்ணன்களாக காக்கா முட்டை திரைப்படத்தில் நடித்த சிறுவர்கள் நடித்துள்ளனர்.

கடலில் நீந்தும் போட்டி.. ஆகா ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷின் கேமரா எத்தனை அற்புதம் செய்துள்ளது. வறண்ட நிலங்களை பதிவு பண்ணுவதாகட்டும்... ஆழ்குழாய் கிணற்றுக்குள் போவதாகட்டும்....இரவு காட்டப்படும் நிலமாகட்டும் ஒரு துளி அலங்காரமில்லாமல் பதிவு செய்துள்ளார். எத்தனை பெரிய பட்ஜெட் கமர்சியல் சினிமாவிற்கு ஒளிப்பதிவு செய்திருந்தாலும் கமர்சியல் சினிமாவிற்கும் இயல்பான மாற்று திரைப்படத்திற்கும் உள்ள இடைவெளியை அழகாக புரிந்து வைத்துள்ளார். வாழ்த்துக்கள் ஓம் பிரகாஷ்.

Director vasanthabalan Facebook post about Aram Nayanthara

ஜிப்ரானின் பின்னணி இசை படத்தின் பதட்டத்தை இன்னும் இன்னும் அதிகப்படுத்தியுள்ளது, தங்கையை தலையில் வைத்து கொண்டு அண்ணன் ஓடுகிற இடத்தில் வருகிற பின்னணி இசை ஆகா அற்புதமான டியூனை கேட்டது போல அற்புதம் செய்கிறது. வாகை சூடவா திரைப்படத்திற்கு பிறகு ஜிப்ரான் பெயர் சொல்லிக்கொள்ள இன்னுமொரு அழகான திரைப்படம். குக்கிராமத்திற்கு வருவதற்கு நம்மிடம் நல்ல நிலையில் உள்ள தீயணைப்பு வண்டிகள் கூட இல்லை... வண்டிகள் இருந்தாலும் அது சாலை வசதி மறுக்கப்பட்ட கிராமத்திற்குள் வர மறுத்து பழதடைந்து விடுகிறது. அரசு இயந்திரமே அப்படி தான் வர மறுத்து பழுதடைந்து கிடக்கிறது என்பதை மிக அழகாக கூறியுள்ளார் கோபி.

ஆழ்குழாய் கிணற்றுக்குள் விழந்த குழந்தையை மீட்க அரசிடம் இருக்கும் ஒரே ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு தாம்பு கயிறு தான். அதை வண்ணத்துப்பூச்சி வடிவத்தில் முடிச்சிட்டு கிணற்றுக்குள் அனுப்புகிறார்கள். இது தானா உங்களுடைய கண்டுபிடிப்பு. சுதந்திரம் வந்து 80 ஆண்டுகள் என்ன பண்ணி கிழிச்சீங்க என்று இந்திய அரசாங்கத்தை பார்த்து இந்த திரைப்படம் கேட்கிற கேள்விக்கு இந்தியாவை ஆண்ட அத்தனை பிரதமர்களும், முதலமைச்சர்களும் பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள். ஆனால் பதிலின்றி அமைதியாக நாம் நிற்பது தான் நம் அவலம்.

Director vasanthabalan Facebook post about Aram Nayanthara

பாதாள சாக்கடையை சுத்தம் செய்ய ரோபோட் இயந்திரம் இல்லை...ஆழ் துளை கிணற்றில் விழுந்த குழந்தையை காப்பாற்றவும் இயந்திரம் நம்மிடம் இல்லை...பொண்ணுங்க பாத்ரும்ல குளிப்பதை துணிக்கடையில் உடைமாற்றுவதை படம்பிடிக்க அதிநவீன பேனா சைஸ் கேமராக்கள் நம்மிடம் உள்ளன. நிலவில் கால் வைத்தது சாதனையில்லை சிறுவனே...ஆழ்துளை கிணற்றுக்குள் சென்று உன் தங்கையை நீ மீட்டு வருவது தான் சாதனை என்று மதிவதனியாகிய நயன்தாரா பேசுவது நம் முகத்தில் அறைகிறது.

பிகினி உடையில்கிளாமராக பார்த்த நயன்தாராவா இது என்று தோன்றுகிறது. பாருப்பா இந்த பெண்ணிற்குள் இத்தனை ரசனையான மனமும் நடிப்பும் உள்ளது என்பது மிக ஆச்சிரியமாக உள்ளது. இந்த படத்தில் நடித்ததன் மூலம் நயன்தாரா தன் நடிப்பு கேரியரில் மிக பெரிய உயரத்திற்கு சென்றுள்ளார். இந்த படத்தின் கதையை கேட்டவுடன் எப்போது படப்பிடிப்பு என்று கேட்டதுடன் நிற்காமல் படத்தை தன் மேனேஜரை வைத்து தயாரித்தும் உள்ளார். இன்று வென்றும் காட்டியுள்ளார்.

வாழ்த்துக்கள் நயன்தாரா தமிழ் சினிமாவின் அதி அற்புதமான கதாநாயகிகள் வரிசையில் உங்களுக்கு இடம் உள்ளது. இப்போது யாராவது நயன்தாராவிற்கு சிலை வைத்தால் திறந்து வைக்க நான் வருகிறேன். இயல்பான நல்ல சினிமாவிற்கு தான் மழைத்துளிக்காக ஏங்கும் சிப்பியை போல நானும் தமிழ் சினிமாவின் உன்னதமான ரசனை கொண்ட ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இதோ நீங்கள் கொண்டாட ஒரு நல்ல சினிமா...இதை இன்னும் பெரிய வெற்றிப்படமாக்குங்கள் அப்போது தான் நிறைய நல்ல சினிமாக்கள் ஒரு மலரை போல தோட்டமெங்கும் பூக்கத்துவங்கும்...மணம் இதயத்தில் கமழும். வெல்டன் கோபி நயினார். இந்த வருடத்தின் அத்தனை விருதுகளுக்கு நீங்களும் உங்கள் படமும் தகுதியானது. தலைப்பில் உள்ள அறம் படமெங்கும் ஒரு காற்றைப்போல நிரம்பிக்கிடக்கிறது. அறம் வெல்க.

Follow Us:
Download App:
  • android
  • ios