ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி பல வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் ஆர்.தியாகராஜன். இவர் திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார் அவருக்கு வயது 75.

சென்னை போரூர் பகுதியில் குடும்பத்தினரோடு வசித்து வந்த தியாகராஜனுக்கு நேற்று அதிகாலை திடீர் என மாரடைப்பு ஏற்பட்டது. இதைதொடர்ந்து இவரை குடும்பத்தினர், ராமச்சந்திரா மருத்துவமைக்கு உடனடியாக கொண்டு சென்றனர் . ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது.

இயக்குனர் ஆர்.தியாகராஜன் பிரபல தயாரிப்பாளர் சின்னப்பா தேவரின் மருமகன் ஆவர். இதுவரை தியாகராஜன் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் 35 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார்.

குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'அன்னை ஓர் ஆலயம்', 'தாய்வீடு', 'தாய்மீது சத்தியம்', 'அன்புக்கு நான் அடிமை', 'ரங்கா' ஆகிய படங்கள். அதே போல் நடிகர் கமல்ஹாசன் நடித்த 'தாயில்லாமல் நான் இல்லை', 'ராம் லட்சுமண்' மற்றும் விஜயகாந்த் நடித்த 'அன்னை பூமி', 'நல்லநாள்' ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார்.

மேலும் தமிழ் சினிமாவில் வசூல் சாதனை நிகழ்த்திய படங்களான , 'ஆட்டுக்கார அலமேலு' மற்றும் 'வெள்ளிக்கிழமை விரதம்' ஆகிய உணர்வு பூர்வமான படங்களை எடுத்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர். 

தற்போது இவருடைய உடல், அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இவருடைய உடலுக்கு திரையுலகை செந்தவர்கள் தொடந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.