பிரபல மலையாள நடிகையும் ‘அசுரன்’படத்தின் மூலம் தமிழுக்கு எண்ட்ரி கொடுத்தவருமான மஞ்சு வாரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த மலையாளப்பட இயக்குநர் ஸ்ரீகுமார் விரைவில் கைதாகக்கூடும் என்று தெரிகிறது. இவருக்கு கொலை மிரட்டல் தொடர்பாக விளக்கம் கேட்டு இன்று கேரள போலீஸார் நோட்டீஸ் அனுப்ப உள்ளனர்.

மலையாள திரைப்பட இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன். இவர் கல்யாண் ஜூவல்லர்ஸ், மலப்புரம் கோல்ட் உட்பட பல முன்னணி விளம்பர படங்களை இயக்கியவர். இவர், மோகன்லால், மஞ்சுவாரியர், பிரகாஷ் ராஜ் நடித்த ’ஒடியன்’என்ற படத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்கினார். இந்நிலையில் இயக்குநர் ஸ்ரீகுமாருக்கு எதிராக ’ஒடியன்’படத்தில் நடித்த நடிகை மஞ்சு வாரியார், கேரள டிஜிபியிடம் புகார் அளித்தார். அதில், ஓடியன் பட ரிலீஸுக்குப் பிறகு இயக்குநர் ஸ்ரீகுமார், சமூக வலைத்தளங்களில் தன்னைத் தொடர்ந்து அவமானப்படுத்தி வருவதாகவும் அவரும் அவர் நண்பர் மாத்யூ சாமுவேலும் தனக்கு எதிராக அவதூறுகளைத் தொடர்ந்து பரப்பி வருவதாகவும் அவர்களால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சுவதாகவும் கூறியிருந்தார்.

இதனிடையே, மஞ்சு வாரியரின் இந்தப் புகாருக்கு இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன் பதிலளித்தார். அதில், உங்களுக்கு நான் என்ன துரோகம் செய்தேன் என்று தெரியவில்லை. உங்களால் ஏராளமான மிரட்டல்களையும் அவமானங்களையும் சந்தித்து விட்டேன். என் மீதான உங்கள் புகாரை சட்டப்படி சந்திக்கத் தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.தனது புகாருக்கு ஸ்ரீகுமார் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில் நடிகை மஞ்சுவாரியர் ஸ்ரீகுமாரின் நடவடிக்கைகளுக்கு  ஆதாரமாக, வாட்ஸ் அப் ஸ்கிரீன் ஷாட்களையும் மேலும் சில ஆதாரங்களையும் போலீசில் ஒப்படைத்தார். அந்த ஆதாரங்களைப் பெற்றுக்கொண்ட கேரள போலீஸார் இன்று ஸ்ரீகுமாருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உள்ளனர். மஞ்சு வாரியர் தந்த கொலை மிரட்டல் ஆதாரங்கள் நிரூபணமானால் ஸ்ரீகுமார் விரைவில் கைது செய்யப்படக்கூடும் என்று தெரிகிறது.