மாதத்தில் 30 நாட்களும் ஷூட்டிங் நடக்கும் பிசியான லொகேஷன் பின்னி மில் என்பது சினிமாக்காரர்களுக்குத் தெரியும். அந்த லொகேஷன் குறித்து தனது முகநூல் பக்கத்தில் சுவாரசியமான பதிவு ஒன்றை எழுதியுள்ளார் ‘8 தோட்டாக்கள்’,’குருதி ஆட்டம்’படங்களின் இயக்குநர் ஸ்ரீ கணேஷ்.

இதோ அந்தப் பதிவு,...தமிழ் சினிமாவும் பின்னி மில்லும்....

சென்சார் சர்டிஃபிகேட், பின்னி மில் – இரண்டும் தமிழ் சினிமாவில் தவறாமல் இடம்பெறும் விஷயங்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் சினிமா பார்ப்பவராக இருந்தால், பின்னி மில்லை நிச்சயம் உங்களால் அடையாளம் கண்டுபிடிக்க முடியும். ஹீரோவும் வில்லனின் அடியாட்களும் சண்டையிடும் இடமாக, ரவுடிகள் தலைமறைவாக பதுங்கியபடி – சிக்கன் பிரியாணி சாப்பிடும் இடமாக, அப்பாவி தங்கச்சிகளை ரேப் செய்யும் இடமாக, அதே ரேப் கேஸ் குற்றவாளிகளை போலீஸ் சுட்டுத் தள்ளும் இடமாக – இப்படி பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இடம் பின்னி மில்.

பின்னி மில்லில் வேறொரு பிளாக்கும் இருக்கிறது. ஹீரோவின் அப்பாவி அப்பா வேலை செய்யும் Government ஆபிஸ், Junior artist-கள் ஏழை அம்மாக்களாக கதறி அழும் அரசு மருத்துவமனை, நேர்மையான போலீஸ் கமிஷனர் – ரவுடிகளை இரண்டு நாட்களுக்குள் பிடிக்க உத்தரவிடும் கமிஷனர் ரூம் Set Up எல்லாமே இந்த ப்ளாக்கில் இருக்கும்.

90% தமிழ் சினிமாக்களின் ஷீட்டிங், பின்னி மில்லிலேயே நடக்கின்றன. பின்னி மில்லில் ஷீட்டிங் நடத்தாமல் ஒரு இயக்குனர் தன் படத்தை முடித்துவிட்டார் எனில் – அவர் மிகப்பெரிய கில்லாடி என்றே சொல்ல வேண்டும். அந்த அளவு புரொடக்ஷன் மேனேஜர்கள், லொகேஷன் மேனேஜர்களின் செல்லப்பிள்ளை இந்த பின்னி மில். பின்னி மில்லில் 30 வருடங்களுக்கும் மேல் வாட்ச்மேனாக இருக்கும் பெரியவரிடம் பேசிக்கொண்டிருந்த போது, ‘இந்த மில் நஷ்டத்தால் மூடப்பட்டது’ என்றார். ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்த இடத்தில், இன்று ஹீரோக்கள் அநியாயத்தை தட்டிக்கேட்டு, அடியாட்களை அடித்து துவைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், வாட்ச்மேனுக்கு ஜாலியாக தான் இருக்கிறது போல. சினிமா நட்சத்திரங்களை பார்த்துக்கொண்டு, புரொடக்சன் சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டு ஜாலியாக இருப்பதாக சொன்னார். தொடர்ந்து ஷீட்டிங் பார்த்துக் கொண்டிருப்பதால், தனக்கு ஓரளவு கதை ஞானம் வந்திருப்பதாகவும்(!!!!), இப்ப எல்லாம் என்ன தம்பி படமெடுக்குறாங்க, என் கிட்ட 2 நல்ல கதை இருக்கு,கேட்கறியா? என்று அவர் சொல்லவும், உசாராகி ஓடி வந்துவிட்டேன்.

கொரியன் டிவிடிக்களைக் காப்பியடிக்கும் டைரக்டர்கள் இந்தப் பெரியவரிடம் கொஞ்ச நேரம் செலவழித்து கதை கேட்டால் தப்பா என்ன?