director shankar speaks sbout 2 0 film making at dubai audio release function

பிரமாண்டத்தின் இயக்குனர் என்று பெயரெடுத்த ஷங்கரின் இயக்கத்தில் ரூ.400 கோடி செலவில் உருவாகி வருகிறது 2.0 என்ற திரைப்படம். இந்த 2.0 திரைப்பட இசை வெளியீட்டு விழா துபையில் இன்று நடைபெறுகிறது. மிக பிரமாண்டமாக திட்டமிடப்பட்டுள்ள இந்த விழாவில் பங்கேற்பதற்காக துபைக்கு வந்திருந்தார் இயக்குனர் ஷங்கர். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார், நடிகை எமி ஜாக்சன் உள்ளிட்ட பிரபலங்களின் கூட்டுப் படைப்பாக இந்தத் திரைப்படம் திரைக்கு வருகிறது. பின்னணிக்கு பலம் சேர்த்திருப்பவர் ஹாலிவுட் புகழ் ஏ.ஆர். ரஹ்மான்.

 இந்தக் கூட்டணி காரணத்தால், இந்தப் படம் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும்2018 ஜனவரி 25ல் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. 

வழக்கமாக உள்நாட்டில்தான் இசை வெளியீடுகள் நடைபெறும். ஆனால், உலக அளவில் இந்தத் திரைப்படத்தைக் கொண்டு செல்ல விரும்பி, இதன் இசை வெளியீட்டு விழாவை துபையில் வெள்ளிக்கிழமை இன்று நடத்துகின்றனர். 

இசை வெளியீட்டுக்கு முன்பாக, இத்திரைப்படக் குழு சார்பில் வியாழக்கிழமை நேற்று ஒரு செய்தியாளர்கள் சந்திப்புக் கூட்டம் துபையில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. செய்தியாளர் சந்திப்பே பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு, 2.0 குறித்துப் பேசிய இயக்குநர் ஷங்கர், 2.0 படம் எந்தப் பின்னணியில் உருவாகியுள்ளது என்ற ரசிகர்களின் யூகங்களுக்கு பதிலளிக்கு விதமாக பேசினார்.

அவர் இது குறித்துப் பேசுகையில், “ 2010-இல் வெளிவந்த எந்திரன் படத்தின் தொடர்ச்சிதான் இந்த 2.0 என்ற ஊகம் பரவலாக இருக்கிறது. அது முற்றிலும் தவறானது. எந்திரன் படத்துக்கு எந்த விதத்திலும் தொடர்பு இல்லாத ஒரு புத்தம் புதிய படைப்புதான் இந்த 2.0 திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் உலகளாவிய வகையில் ஒரு விஷயத்தைக் கூற முயற்சி செய்திருக்கிறோம். உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தக்கூடிய விஷயம் அது. இந்தத் திரைப்படம், எந்த ஹாலிவுட் திரைப்படத்தின் நகலும் கிடையாது. ஆனால், ஹாலிவுட் திரைப்படங்களின் பாணியில் இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது” என்று தெளிவாகக் கூறினார்.