"குமாரு.. கொக்கி குமாரு.. இந்த வருஷம் வராப்ல" - இயக்குனர் செல்வராகவன் பதிவால் குஷியில் அவர் ரசிகர்கள்!
Pudhupettai 2 Update : பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் அவருடைய தம்பி பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2006ம் ஆண்டு வெளியாகி மாபெரும் ஹிட்டான படம் தான் புதுப்பேட்டை.
இயக்குனர் கஸ்தூரிராஜா அவர்களுடைய மகனான செல்வராகவன் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான "துள்ளுவதோ இளமை" என்கின்ற திரைப்படத்தின் மூலம் திரைக்கதை ஆசிரியராக தமிழ் சினிமா உலகில் களமிறங்கினார். அவர் இயக்கத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான முதல் திரைப்படம் தான் "காதல் கொண்டேன்".
தொடர்ச்சியாக பல திரைப்படங்களை தனது தம்பி பிரபல நடிகர் தனுஷ் அவர்களை வைத்து இயக்கிய செல்வராகவன், இறுதியாக கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான "நானே வருவேன்" என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதன் பிறகு அதே 2022ம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான "பீஸ்ட்" திரைப்படத்தில் அல்தாப் ஹுசைன் என்கிற கதாபாத்திரத்தில் ஒரு நடிகராகவும் அறிமுகமானார்.
தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்து வரும் செல்வராகவன், தற்போது தனுஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள அவருடைய ஐம்பதாவது திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் தற்பொழுது வெளியிட்டுள்ள ஒரு பதிவு அவருடைய ரசிகர்களையும், தனுஷ் ரசிகர்களையும் மிகப்பெரிய சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
பல வருடங்களாக ஒரு திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு தனுஷ் மற்றும் செல்வராகன் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது என்றால், அது புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகத்திற்கு தான். இந்நிலையில் இந்த 2024 ஆம் ஆண்டு புதுப்பேட்டை படத்தினுடைய இரண்டாம் பாகம் உருவாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக செல்வா தெரிவித்திருக்கிறார்.
அதேபோல அவருடைய இயக்கத்தில் உருவான கார்த்தி மற்றும் பார்த்திபன் மிரட்டிய "ஆயிரத்தில் ஒருவன்" படத்தின் இரண்டாம் பாகத்தையும் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.