தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த இரண்டு பிரபலங்கள் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை தொடர்ந்து ஜாதிப் பெயரைச் சொல்லி திட்டி வருவதாகவும் அவர்கள் இருவரும் இனி அதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்கவேண்டும் என்றும் ஃபெப்சி தலைவரும் இயக்குநருமான ஆர்.கே.செல்வமணி எச்சரித்தார்.

நேற்று மாலை ஃபெப்சி அலுவலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றுக்கு அவசர அழைப்பு விடுத்த இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தான் சமீபத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்து திரைத்துறைக்கு சில உதவிகள் கேட்டபோது தமிழ்த் திரையுலகினர் குறித்து சில வருத்தங்களை வெளியிட்டதாகத் தெரிவித்தார். அப்போது பேசிய அவர், ‘எங்க பா.ஜ.கவுக்கு தமிழக மக்கள் ஓட்டுதான் போட மாட்டேங்குறீங்க. அதுகூட பரவாயில்லை. உங்க அமைப்பைச் சேர்ந்த ரெண்டு முக்கிய புள்ளிங்க என்னை ‘பாப்பாத்தி’ன்னு ஜாதி பேரைச் சொல்லியே திட்டுறாங்க’என்று வருத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

ஆனால் அந்த இரு பிரபலங்களின் பெயர்களை நிருபர்கள் கேட்டபோது வெளியிட மறுத்த அவர்,’அவங்க ரெண்டு பேருமே பெரிய அளவுல வளந்துட்டாங்கங்குறதனால இந்தப் பிரச்சனை அவங்களப் பாதிக்காது. இப்ப வளர்ந்துட்டு வர்ற புதியவர்களைத் தான் பாதிக்கும். அதை நினைச்சாவது இனிமே அவங்க தங்களோட நடவடிக்கைய மாத்திக்கணும். அரசியல் ரீதியா என்ன வேணும்னாலும் பேசிக்குங்க. ஆனா தனி மனிதத் தாக்குதல்களை இனியும் அனுமதிக்க முடியாது. அதையும் மீறிப் பேசினா, திரைத்துறை சார்பா கடுமையான நடவடிக்கைகள் இருக்கும்’என்று எச்சரித்தார்.