’ஒரு படம் ரிலீஸாகவில்லையென்றால் அது ஏன் என்று கேட்க வேண்டியது படத்தின் தயாரிப்பாளர்களைத்தானே தவிர இயக்குநர்களை அல்ல’என்று தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக பதிலளித்திருக்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி.

2007ல் பரத்தின் ‘கூடல் நகர்’படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சீனு ராமசாமி கடைசியாக வெளியான ‘கண்ணே கலைமானே’வரை 7 படங்களை இயக்கியுள்ளார். அதில் ‘தென்மேற்குப் பருவக் காற்று’துவங்கி விஜய் சேதுபதி மட்டுமே 4 படங்களில் நடித்துள்ளார். ஆனால் அந்த நான்கில் லிங்குசாமி தயாரிப்பில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘இடம் பொருள் ஏவல்’ யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ள ‘மாமனிதன்’படங்கள் நீண்ட காலத் தயாரிப்பில் இருக்கின்றன.

அப்படங்கள் எப்போது ரிலீஸாகும் என்று வலைதளங்கள் மூலமாக ரசிகர்கள் தொடர்ந்து கேள்விகள் எழுப்பி வந்த நிலையில், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தனது இரு தயாரிப்பாளர்களின் ட்விட்டர் முகவரியை வெளியிட்ட சீனு ராமசாமி,...விஜய் சேதுபதி & விஷ்ணு விஷால் நடித்த 
இடம் பொருள் ஏவல், விஜய் சேதுபதி நடித்த ’மாமனிதன்’ இந்த இரண்டு படங்களில் இயக்குநராக என் பணி முடிந்து விட்டது ,வெளியீடு சம்பந்தமான தகவல்களை என்னிடம்  கேட்கும் அன்பர்களே.. நீங்கள் கேட்கக் வேண்டிவர்கள் @thisisysr @dirlingusamy என்று குறிப்பிட்டுள்ளார். இந்த இரு படங்களில் ‘இடம் பொருள் ஏவல்’படம் தயாராகி மூன்று ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.