‘98ல் ‘சொல்லாமலே’படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சசி இந்த 21 ஆண்டுகளில் வெறுமனே எட்டுப் படங்கள் மட்டுமே இயக்கியிருக்கிறார் என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கும்.அப்படிப்பட்ட திறமையான சோம்பேறி ‘பிச்சைக்காரன்’வெற்றிப்படத்துக்குப் பின்னர் இயக்கியிருக்கும் படம் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’.தலைப்பை வைத்தே என்ன மாதிரியான கதை என்று சொல்லிவிடமுடியும்.

ஜி.வி.பிரகாஷ்,  லிஜோ மோல் இருவரும் பெற்றோர் இல்லாமல் வளரும் அனாதை அக்கா , தம்பி. உலகை எதிர்த்து தங்களின் வாழ்க்கையை சந்தோஷத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். ஜீவிக்கு பைக் ரேஸ் பழக்கம் ஏற்பட, ஒரு பைக் ரேஸின்போது போக்குவரத்து அதிகாரியான சித்தார்த்திடம் மாட்டி அவமானப்படுத்தப்படுகிறார்.மனம் முழுக்க வன்மம் நிறைந்திருக்கும் வேளையில் அவர் அக்காவிற்கு மாப்பிள்ளையாக சித்தார்த் வர, இருவருக்கும் பிரச்சனை ஆர்ம்பிக்கிறது. இதில் ஜீவியின் அக்கா பாதிக்கப்பட, மாமன் மச்சான் சண்டை உச்சம் தொடுகிறது. இன்னொரு புறம் ஜிவிக்கு பைக் ரேஸால் பிரச்சினையும், சித்தார்த்துக்கு தன் வேலையில் பிரச்சினையும் வருகின்றன. இந்தப் பிரச்சனைகள் கடந்து இந்த உறவுச் சிக்கல் என்னவாகிறது என்பதே ’சிவப்பு மஞ்சள் பச்சை’.

விஜய் ஆண்டனியை வைத்து சசி இயக்கியிருந்த ‘பிச்சைக்காரன்’படத்தின் வெற்றியால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருப்பதென்னவோ உண்மை. ஆனால் இப்படம் மீண்டும் மனித உறவுச் சிக்கலை அலசும் படம் தான் என்றாலும் அதை முற்றிலும் புதிய கோணத்தில் கையாண்டிருக்கிறார் சசி. குறிப்பாக தனது பாத்திரங்களுக்கு அவர் தேர்ந்தெடுத்திருக்கும் நடிகர்கள். போக்குவரத்துக் காவல்துறை அதிகாரியாக சித்தார்த், அவரது யூனிஃபார்ம் போலவே கனகச்சிதமாகப் பொருந்துகிறார். லிஜோ மோல் தமிழுக்கு இன்னொரு நல்வரவு. அதே போல் ஜீ.வி.பிரகாஷும் தனது விளையாட்டுத்தனமான பாத்திரத் தேர்விலிருந்து நல்ல ஒரு லெவலுக்கு தன்னை உயர்த்திக்கொண்டிருக்கிறார்.

பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவு, மூர்த்தியின் கலை ,சித்துகுமாரின் இசை வழக்கம்போல் சசி முத்திரையுடன் ஜொலிக்கின்றன.

படத்தின் நீளம் அதிகமோ என்ற எண்ணவைக்கும் கிளைமாக்ஸை ஒட்டிய சண்டைக்காட்சியை ஈவு இரக்கமில்லாமல் இன்னும் கொஞ்சம் வெட்டியிருக்கலாம். படத்திலுள்ள சின்னச்சின்ன லாஜிக் ஓட்டைகளை மறந்து ரசிக்கமுடிகிறபடியால் சசிக்கு மறுபடியும் ஒரு கிரீன் சிக்னல்தான்.