பிக்பாஸ் வீட்டில் சேரனை கடந்த வாரம், நடிகர் சரவணன், வாயா... போயா... வாடா ...  போடா... என மரியாதை இல்லாமல் பேசியது, பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களை மட்டும் இன்றி, ஒட்டு மொத்த மக்களையும் அதிர்ச்சியடைய வைத்தது. 

இதை தொடர்ந்து, நேற்றைய தினம் இந்த பஞ்சாயத்து கமல் முன் விவாதத்திற்கு வந்த போது, "ஒருவரை எப்படி அழைக்க வேண்டும் என்றால் கூட அவர் அனுமதி தர வேண்டும்'. என கூறி தன்னுடைய அண்ணன் தன்னை 16 வயதிலேயே வாங்க... போங்க என அழைக்க துவங்கி விட்டதாக அதற்கு ஒரு கதை கூறினார் கமல்.

பின்னர் சேரனிடம்,  சரவணன் காலில் விழுந்து கூட  மன்னிப்பு கேட்க துணிந்தார். இந்த பிரச்சனை பிக்பாஸ் வீட்டின் உள்ளே முடிவிற்கு வந்து விட்ட போதிலும், சேரன் போன்ற தலை சிறந்த இயக்குனர்களை அவமதிப்பதா? என சில இயக்குனர்கள் இதனை விடா பிடியாக பிரச்னையாக்கி வருகிறார்கள்.

இயக்குனர் வசந்தபாலன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள் சேரன்' என்று தனது முகநூலில் பதிவு செய்த நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் சேரன் செல்ல காரணமாக இருந்த, நடிகர் விஜய் சேதுபதி அவரை பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று அழைத்து வர வேண்டும் என கூறியுள்ளார் இயக்குனர் 'சங்ககிரி'

இவர் தமிழில் 'வெங்காயம்' என்ற திரைப்படத்தை இயக்கியவர்.  இதுகுறித்து அவர் கூறுகையில் , பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று நடிகர் விஜய் சேதுபதி, சேரனை அழைத்து வரவில்லை என்றால், அவர் சேரன் மீது அளவற்ற மரியாதை வைத்திருக்கும் என்னைப் போன்ற சிலர் ஒன்று சேர்ந்து பிக்பாஸ் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை வெளியே அழைத்து வருவோம் என சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் சேரன் ஒரு நல்ல கலைஞர் , அவருடைய படைப்புகள் உன்னதமானவை , அவருக்கு ஏற்பட்ட ஒரு துன்பம் தமிழக மக்களுக்கு ஏற்பட்ட ஒரு துன்பமாக பார்க்கப்படுகிறது என்றும்  சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளார். 

இந்த நிகழ்ச்சி  ஒரு ரியாலிட்டி ஷோ என்றாலும், மக்கள் அதை உண்மை என்றே நம்பி வருகிறார்கள். அந்த வகையில் சேரன் ஒரு பெண்ணை தவறாக தொட்டார் என்பதும், மூத்த நடிகர் வாடா போடா என்று பேசுவதையும் ஏற்று கொள்ள முடியாது.  இது அவரை அவமதிப்பது போல் உள்ளதால் அங்கு நடைபெறும் விஷயங்களை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என கூறியுள்ளார் இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார்.