பிரபல இயக்குனர் ரா.சங்கரன் வயது மூப்பு காரணமாக, இன்று காலமானார் அவரின் வயது 92.
ராமரத்தினம் சங்கரன் என்பது இவரின் முழு பெயராக இருந்தாலும், திரையுலகில் பலர் இவரை ரா.சங்கரன் என்றே அழைத்து வந்தனர். ஜூன் 12-ஆம் தேதி 1931 இல் பிறந்த இவர் மேடை நாடகங்கள் மூலம் கவனம் பெற்று, பின்னர் திரைப்பட இயக்குனராக மாறினார். ரா.சங்கரன் பிரபல திரைப்பட நடிகர் ஜாவர் சீதாராமனின் உறவினர் ஆவார்.
தமிழில் 1974-ஆம் ஆண்டு 'ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு' என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், இதை தொடர்ந்து, தேன் சிந்துதே வானம், ஒருத்தனுக்கு ஒருத்தி, துர்கா தேவி, தூண்டில் மீன், வேலும் மயிலும் துணை உள்ளிட்ட 8 படங்களை இயக்கினார். மேலும் இவர் இயக்கிய 'வேலும் மயிலும் துணை', 'குமரி பெண்ணின் உள்ளத்திலே' போன்ற படங்கள் பல விருதுகளை வாங்கி குவித்தது.
திரைப்பட இயக்குனர் என்பதை தாண்டி, ரா.சங்கரன் பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். புதுமை பெண், ஒரு கைதியின் டைரி, மௌன ராகம், ஜாமீன் கோட்டை, சதிலீலாவதி, காதல் கோட்டை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவர் 1999-ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான 'அழகர்சாமி' படத்தில் நடித்திருந்தார்.
கடந்த சில வருடங்களாக, வயது மூப்பு காரணமாக திரைப்படங்கள் மற்றும் எந்த திரைப்பட பணியிலும் தன்னை ஈடுபடுத்தி கொள்ளாமல் ஓய்வில் இருந்த, ரா.சங்கரன் இன்று தன்னுடைய 92 வயதில் காலமானார். இந்த தகவல், திரையுலகை சேர்ந்த பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது இயக்குனர் பாரதி ராஜ தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில், "எனது ஆசிரியர் இயக்குனர் திரு.ரா.சங்கரன் சார் அவர்களின் மறைவு வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். என தெரிவித்துள்ளார். மேலும் பலர் தொடர்ந்து தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
