Asianet News TamilAsianet News Tamil

Pasi Durai : 2 தேசிய விருதுகளை வென்றவர்... இயக்குனர் ‘பசி’ துரை காலமானார் - சோகத்தில் திரையுலகம்

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 40க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ‘பசி’ துரை காலமானார்.

Director Pasi Durai Passed Away at the age of 92 gan
Author
First Published Apr 22, 2024, 4:00 PM IST

தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்த பிரபல இயக்குநர் துரை இன்று உடல்நலக்குறைவால் காலமானார். கமலின் நீயா, ரஜினியின் ஆயிரம் ஜென்மங்கள், சிவாஜியின் துணை, கிளிஞ்சல்கள் உள்பட 40க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை இயக்கியவர் துரை. இதில் அவர் இயக்கிய அவளும் பெண்தானே, பசி போன்ற படங்களுக்காக இரண்டு தேசிய விருதுகள், தமிழ்நாடு அரசின் சிறந்த இயக்குநர் விருது மற்றும் கலைமாமணி விருதுகளை வென்றுள்ளார். 

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் இவர் படங்களை இயக்கி உள்ளார். பெண்களை மையப்படுத்தி இவர் இயக்கிய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இவர் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற 58-வது தேசிய திரைப்பட விருது விழாவில் நடுவர் குழுவின் உறுப்பினராக பணியாற்றி இருந்தார்.

இதையும் படியுங்கள்... மார்ச் 2024-ல் பிரபலமான டாப் 10 நடிகர்கள் யார்! அஜித் லிஸ்டுலையே இல்லை... விஜய்க்கு எத்தனாவது இடம் தெரியுமா?

இவர் கடந்த 1979-ம் ஆண்டு வெளியாகிய பசி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு அதற்கு சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருதும் கிடைத்ததால், அப்படத்திற்கு பின்னர் அவரை ‘பசி’ துரை என்றே செல்லமாக அழைக்க தொடங்கினர். இவரின் இயற்பெயர் செல்லதுரை. இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இயக்குனர் துரையின் மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரின் மறைவிற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... அபிராமியுடன் கூட்டு சேரும் தீபா.. அம்பலமாகும் ரியா பற்றிய ரகசியங்கள் - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

Follow Us:
Download App:
  • android
  • ios