பெயரை ஒரு இடத்தில் கூட குறிப்பிடாமல் டாக்டர் கிருஷ்ணசாமியை அடித்துத் துவைத்து தொங்கவிட்டிருக்கிறார் ’பரியேறும் பெருமாள்’பட  இயக்குநரும் பா.ரஞ்சித்தின் சிஷ்யருமான மாரி செல்வராஜ். அவரது பதிவுக்குக் கீழே ‘பக்தாளாக மாறிவிட்ட மருத்துவரே புரிகிறதா?’என்பது போன்ற கமெண்டுகள் குவிந்துவருகின்றன.

இயக்குநர் மாரி செல்வராஜ் ‘பரியேறும் பெருமாள்’என்ற தனது முதல் படத்திலேயே அழுத்தமான முத்திரை படைத்தவர். தனது முகநூல் பக்கத்தில் அவ்வப்போது காத்திரமான அரசியல் பதிவுகள் எழுதி வருபவர். இன்று சுமார் 1 மணி நேரத்துக்கு முன்னர் எழுதிய பதிவில்,...

நீங்கள் என்னை அடகுவைத்துவிட்டதாகதான் சொன்னார்கள்
அதனால் எனக்கு நம்பிக்கை இருந்தது
நானே என்னை சம்பாதித்து
என்னை நானே மீட்டுகொள்ளலாமென்று
இப்போது தான் நீங்கள் என்னை
முழுவதுமாக விற்றுவிட்டதை சொன்னார்கள்
உங்களுக்கு இவ்வளவு பண கஷ்டம் இருக்கும்
என்பதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை
அரைகுறை சமூகநீதி அரசியலில் கடன்படுவது இயல்புதான்
என் வருத்தம் அதுவல்ல
என்னை விற்ற பணத்தில்
உங்களுடைய எல்லா கடனையும் அடைக்க முடியுமா
அப்படி அடைக்க முடியாவிடில்
மறுபடியும் நீங்கள் ஈவு இரக்கம் இல்லாமல் விற்பதற்கு
யாரவது இன்னும் மிஞ்சி இருக்கிறார்களா என்பதுதான்
ஆகவே என் அருமை தலைவரே
உங்கள் முழுகடனையும் அடைப்பதற்கு 
இன்னும் கொஞ்சம் மக்கள் தேவைபடலாம்
அதற்காகவாவது கொஞ்சம் சமூக நீதி பேசுங்கள்
அப்படியாவது எளியவர்கள் கொஞ்சம் இளைப்பாறட்டும்
அவர்களின் இளைப்பாறலும் ஆசுவாசமும் 
உங்களுக்கு கசக்கத்தான் செய்யும்
உங்களின் தற்கொலை காலத்தை தள்ளிவைப்பதற்கு
இதைவிட இன்னொரு வழி நிச்சயம் இருக்கமுடியாது
அப்புறம் வேறொன்றுமில்லை
எப்போதும் போல என்னை வைத்துக்கொண்டு 
நீங்கள் ஆடும் சூதாட்டத்தையும்
ஒரு மேய்ப்பனாக வறண்ட நிலத்தில் மறித்து வைத்து 
பெருமையான மண்ணை தின்னே
உயிர் வாழ கற்றுகொடுக்கும்
உங்கள் அரசியல் அறிவின் பேராற்றலையும் கண்டு
நான் வியக்கிறேன்
ஐ லவ் யூ தலைவரே❤️