கோடம்பாக்கத்திலுள்ள அத்தனை இயக்குநர்களும் நடிகர் அவதாரம் எடுத்து வரும் நிலையில், விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’படத்துக்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் தடம் பட இயக்குநர் மகிழ் திருமேனி.

கவுதம் வாசுதேவ மேனனின் உதவியாளரான மகிழ் திருமேனி முன் தினம் பார்த்தேனே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அடுத்து தடையறத் தாக்க, மீகாமன் படங்களின் மூலம் தரமான இயக்குநர் என்று பெயரெடுத்த அவர் கடைசியாக வெளிவந்த தடம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தன் தடத்தை ஆளமாகப் பதித்தார். 

இடையில் ‘இமைக்கா நொடிகள்’படத்துக்கு அனுராக் காஷ்யப்புக்காக டப்பிங் பேசியிருந்த அவர் வில்லனுக்கு டப்பிங் என்பது தாண்டி இப்போது நிஜ வில்லனாகவே ஆகியிருக்கிறார். எஸ்.பி.ஜனநாதனின் இணை இயக்குநரான  ‘வெங்கட கிருஷ்ண ரோகாந்த்’ விஜய் சேதுபதியை வைத்து இயக்கும் படத்துக்கு ஒரு நாள் முன்புதான் தலைப்பை அறிவித்தார்கள். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற அருமையான தலைப்பைக் கொண்டிருக்கும் அந்தப்படத்தில் விஜய் சேதுபதியின் வில்லனாக களம் இறங்குகிறார் மகிழ் திருமேனி. இப்படி ஒவ்வொரு டைரக்டரா வில்லனாயிட்டே வந்த ஒரிஜினல் வில்லன் நடிகர்கள் பொழப்பு என்னாகுறது பாஸ்?