மசாலா சினிமாக்களும் அடிதடிகளில் ஈடுபடும் ஹீரோக்களை ஊதிப்பெருக்கும் சினிமாக்களும்தான் தான் மாணவர்கள் மத்தியில்  கத்தி எடுக்கும் கலாசாரத்தை தூண்டிவிடுகிறது என திரைப்பட இயக்குநர் லெனின் பாரதி குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் சிறந்த திரைப்படத்திற்கான விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், ’பரியேறும் பெருமாள்’, ’மேற்கு தொடர்ச்சி மலை’, ’காலா’ உள்ளிட்ட படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் திரைப்பட இயக்குநர்களான மாரி செல்வராஜ், லெனின் பாரதி, நடிகை ரோகிணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய லெனின் பாரதி,  ’ சமீபத்தில் பேருந்தில் கத்தியுடன் அலைந்த மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களுக்கு ஒரே மாதிரியாக வழுக்கி விழுந்து கை அடிபட்டுள்ளது. எளிய மக்கள் தவறு செய்யும் போது தான் கழிவறை வழுக்குகிறது, வசதி படைத்தவர்கள் தவறு செய்யும் போது நன்றாக இருக்கிறது. மாணவர்கள் கத்தியோடு அலைகிறார்கள் என்றால் அதற்கு காரணம் சினிமா. அங்குதான் தூண்டப்படுகிறார்கள்.

தனது நாயகர்களை பார்த்து இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதற்கு காரணமான இயக்குநர்கள், நடிகர்கள் கழிப்பறையில் வழுக்கி விழுந்தால் நன்றாக இருக்கும். கத்தி எடுக்கும் கலாச்சாரத்தை தூண்டிவிடுகிறது சினிமா தான்’ என காரசாரமாகப் பேசினார்.