ஏற்கனவே பாலிவுட் திரையுலகை சேர்ந்த, பிரபல தயாரிப்பாளர் வீட்டில் தங்கி பணிபுரியும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்த நிலையில், தற்போது பிரபல இயக்குனர் வீட்டில் பணிபுரியும்  இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக அவரே கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதால், அதனை கட்டுப்படுத்தும் முயற்சிகளை, மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுத்து வருகிறது.  எனினும் இதன் தாக்கம் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது.

இந்நிலையில், கடந்த வாரம்... பிரபல பாலிவுட் பட தயாரிப்பாளரும், தமிழில் தல அஜித்தை வைத்து, நேர்கொண்ட பார்வை, மற்றும் வலிமை ஆகிய படங்களை தயாரித்துள்ள, மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் வீட்டில் பணி புரியும் ஒருவருக்கு முதலில் கொரோனா அறிகுறி ஏற்பட்டதை தொடர்ந்து அவர் மும்பை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சுகாதார துறை அதிகாரிகள், போனி கபூர் வீட்டில் பணிபுரியும் அனைவர்க்கும் கொரோனா டெஸ்ட் செய்ததில் இருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து, அவரது வீட்டில் பணிபுரியும் மற்ற பணியாளர்கள், போனி கபூர் மற்றும் அவருடைய இரு மகள்களும் 14 நாள் தனிமையில் வைக்கப்பட்டனர்.

இதையடுத்து தற்போது பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர்  வீட்டில் பணிபுரிந்து வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அவரே தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், தன்னுடைய வீட்டில் தங்கி வேலை செய்பவர்களுக்கு கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டதுமே, அவர்களை தன்னுடைய வீட்டில் தனிமை படுத்தியதோடு சுகாதார துறைக்கும் தகவல் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

பின்னர் தன்னுடைய வீட்டில் உள்ள அனைவருக்குமே கொரோனா பரிசோதனை செய்ததாகவும், நெகடிவ் என வந்த போதிலும், 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என சுகாதார துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளதாகவும், அதனால் அடுத்த 14 நாட்களுக்கு தான் தனிமையில் இருக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளார் கரண் ஜோகர்.

தன்னுடைய பணியாளர்கள் உரிய சிகிச்சைக்கு பின் உடல் நலம் தேறி, மீண்டு வருவார்கள் என்றும், அனைவரும் நல்ல படியாக வீட்டிலேயே இருங்கள் என்றும் தெரிவித்துள்ளார் கரண் ஜோகர்.