அறிமுக இயக்குனர் ஜே.ஜே.பிரெட்ரிக் இயக்கத்தில், நடிகர் சூர்யாவின் தயாரிப்பில், நடிகை ஜோதிகா நடித்துள்ள,  'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளை கடந்து ஓடிடி தளத்தில் நேற்று வெளியாகி, ரசிகர்கள் மத்தியிலும் பிரபலங்கள் மத்தியிலும் தொடர்ந்து நல்ல விமர்சனங்களையும், வரவேற்பையும் பெற்று வருகிறது.

இந்த படத்தில் நேர்மையான வழக்கறிஞரான ஜோதிகா நீதிமன்றத்தில் ஆஜராகும் ஒவ்வொரு முறையும் வழக்கமான சினிமாவில் காட்டப்படும் கோர்ட் சீன்களைப் போல் அல்லாமல், அமைதியாக காட்டி விருப்புறுப்பை ஏற்படுத்தியுள்ளார் இயக்குனர். 

நேர்மைக்கு எப்போது சட்டென்று ஆதரவு கிடைத்துவிடாது, என்பது பொன்மகளுக்கு மட்டும் விதிவிலக்கா என்ன? அந்த வகையில் இவரை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தும் காட்சிகள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள. அப்படி நடத்தும் அமைப்புகளில் ஒன்றாக 'இந்திய ஜனநாயக மாதர் சங்கமும்'  சித்தரிக்கப்பட்டிருந்தது. 

இதற்கு அந்த அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து படத்தின் இயக்குனர் பிரெட்ரிக் கடிதத்தின் மூலம் மன்னிப்பு கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மாதர் சங்கத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தங்கள் அமைப்பின் பெயர் பயன்படுத்தப்பட்டது எங்கள் கவனக் குறைவால் நடந்த ஒன்று. அதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. அதற்காக தார்மீகமாய் மன்னிப்புக் கேட்பதோடு தங்கள் இயக்கத்தின் பெயரையும் லோகோவையும் உடனடியாக நீக்க உறுதியளிக்கிறோம் என தெரிவித்துள்ளார். இந்த திரைப்படத்துக்கான கள ஆய்வில் தங்களின் போராட்டங்களிலிருந்து நிறைய செய்திகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் நாங்கள் நன்றிக் கடன்பட்டுள்ளோம். இவ்வாறு இயக்குநர் பிரெட்ரிக் தெரிவித்துள்ளார்.