இன்னும் அஜித்தின் முதல் பட ஷூட்டிங்கே தொடங்கவில்லை. ஆனால் அஜீத்துடன் இன்னொரு படத்தையும் முடித்துவிட்டு, மூன்றாவதாக  ரஜினி படம் ஒன்றை இயக்குநர் விநோத் இயக்கவிருப்பதாக வந்துகொண்டிருக்கும் செய்திகள் கண்டு நொந்துபோயிருக்கிறார் அவர்.

‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களின் இயக்குநர் விநோத் அடுத்த அஜீத்தை வைத்து ‘பிங்க்’ இந்திப்படத்தின் ரீமேக்கை இயக்கவிருக்கிறார். இதனை அடுத்தும் விநோத்தின் சொந்தக் கதை ஒன்றில், அடுத்த ஆகஸ்டிலிருந்து அஜீத்தே நடிக்கவிருக்கிறார் என்று ஓரளவு நம்பத்தகுந்த வட்டாரங்கள் உறுதி செய்கின்றன.

நிலைமை இப்படியிருக்க, இந்த விநோத் சூப்பர் ஸ்டாரை ரஜினியை சந்தித்து ஒரு கதை சொல்லியிருப்பதாகவும் அதை மிகவும் ரசித்துக்கேட்ட ரஜினி, அதில் தான் நடிக்க விரும்புவதாகவும் எனவே அந்தக்கதையை நேரம் கிடைக்கும்போதெல்லாம் நன்றாக செதுக்கிவைக்கும்படி சொல்லியிருப்பதாகவும் கடந்த இரு தினங்களாக செய்திகள் நடமாடிவருகின்றன. இதே செய்திக்கு உப்பு, காரம் சேர்த்து அதில் ரஜினியுடன் தனுஷும் இணைந்து நடிப்பதாகவும் சிலர் கிளப்பிவிடுகிறார்கள்.

இச்செய்திகளைப் படித்து மகிழ்ச்சி அடைவதற்குப் பதில் அதிர்ச்சியடைந்த இயக்குநர் விநோத், ‘யாரோ அஜீத் கூட ரெண்டாவது படம் இயக்கக் கிடைச்ச வாய்ப்புக்கு வேட்டு வைக்கிறமாதிரி இப்படிப்பட்ட செய்திகளைப் பரப்பிவிடுறாங்க. விட்டா எனக்குத் தெரியாம ரஜினி படத்துக்கு ஷூட்டிங்கே ஃபிக்ஸ் பண்ணிடுவாங்க போலருக்கு’ என்று புலம்புகிறார்.