படம் முடியும் வரை பரபரப்பான செய்திகள் எதுவும் வெளியாகவேண்டாம் என்ற எண்ணத்துடன் சைலண்டாக நடந்துவரும் ‘ஆதித்யா வர்மா’ படத்தில் துருவ் விகரமின் அப்பா வேடத்தில் நடிக்க இயக்குநர் கவுதம் மேனன் ஒப்பந்தமாகியிருப்பதாக பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தெலுங்குப் பட அர்ஜுன் ரெட்டி ரீமெக் பஞ்சாயத்துக்கள் ஊர் உலகம் அறிந்தது.பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் உள்ளிட்டோர் நடித்த இந்தப் படத்துக்கு வர்மா என்று தலைப்பிடப்பட்டது. எனினும், தயாரிப்பு நிறுவனத்துக்கும், பாலாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினைகளால் இந்தப் படம் கைவிடப்பட்டது. பின்னர் வேறு ஓர் இயக்குநரை வைத்து முழு படத்தையும் புதிதாக உருவாக்கப்போவதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதில் முதன்மைப் பெயராக இயக்குநர் கவுதம் மேனனின் பெயர் அடிபட்டது. 

ஆனால் என்ன காரணத்தாலோ கவுதம் பின்வாங்க தெலுங்கு அர்ஜுன் ரெட்டியின் இணை இயக்குநர்  கிரீசாயா இயக்குகிறார். கதாநாயகன் துருவ் விக்ரமை தவிர ஒட்டுமொத்த படக்குழுவையும் மாற்றியுள்ளனர். இந்தப் படத்தில் துருவ் விக்ரமின் தந்தையாக யார் நடிப்பதென்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. 

ஒரு வழியாக துருவ் விக்ரமுக்குத் தந்தையாக நடிக்க, படத்தை இயக்க மறுத்த  இயக்குநர் கவுதம் மேனன் ஒப்பந்தமாகியுள்ளார். படப்பிடிப்பு பணிகளில் விரைவில் கவுதம் மேனன் இணையவுள்ளார். படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை பனிதா சந்து நடிக்கிறார். இரண்டாவது கதாநாயகியாக நடிக்க பிரியா ஆனந்த் ஒப்பந்தமாகியுள்ளார். துருவ் விக்ரமின் நண்பர் வேடத்தில் அன்புதாசன் நடிக்கிறார்.

படப்பிடிப்பு பணிகள் முழுமூச்சாக நடந்து வந்தாலும் தயாரிப்பாளர் தரப்பு அறிவித்தபடி இப்படம் ஜூன் மாதம் வெளியாக சாத்தியமில்லை என்கின்றனர் படக்குழுவினர். காரணம் விக்ரமின் மகன் துருவ் நடிப்பு வராமல் பாடாய்ப் படுத்துகிறாராம்.