இயக்குனர் பாரதிராஜாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

புத்தாண்டு தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. இதன் காரணமாக திரையுலகம் கடும் பாதிப்பை சந்தித்தது. பொங்கலுக்கு ரிலீசாவதாக இருந்த வலிமை, ராதே ஷ்யாம், ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்களின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டன. இது ஒருபுறம் இருந்தாலும், திரைப்பிரபலங்கள் ஏராளமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுவது தொடர்கதை ஆகி வருகிறது.

கடந்த இரு மாதங்களில் நடிகர்கள் கமல்ஹாசன், விக்ரம், அருண்விஜய், விஷ்ணு விஷால், மகேஷ் பாபு, வடிவேலு, சிரஞ்சீவி, மம்முட்டி, துல்கர் சல்மான் ஆகியோரும். நடிகைகள் குஷ்பு, மீனா, திரிஷா, ஷோபனா, ஷெரின், கஜோல், ஜான்வி கபூர் ஆகியோரும் கொரோனாவின் பிடியில் சிக்கி பின்னர் சிகிச்சை பெற்று மீண்டனர்.

இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜாவும் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. அவர் விரைவில் நலம்பெற வேண்டி திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.