பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த 5ம் தேதி சென்னையில் இருக்கும் எம்.ஜி.எம். மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். தன்னை மருத்துவர்கள் வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ள கூறியதாகவும், ஆனால் குடும்பத்தினர் நலன் கருதி மருத்துவமனைக்கு வந்ததாகவும் கூறினார். தான் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும்,  மருத்துவர்கள் தன்னை ஓய்வில் இருக்க சொல்லியுள்ளதால் யாரும் எனக்கு போன் செய்ய வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். 

கடந்த 14ம் தேதி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின்  உடல்நலம் திடீர் என்று மோசமடைந்து விட்டதாகவும், மருத்துவ நிபுணர்களின் அறிவுரையின்படி அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. அவரின் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது” என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. இதையடுத்து திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் எஸ்.பி.பி. நலமுடன் வீடு திரும்ப வேண்டுமென பிரார்த்தனை செய்தனர். 

இதனிடையே கடந்த சனிக்கிழமை முதலே எஸ்.பி.பி.யின் உடல் நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து நல்ல செய்திகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி மயக்கத்திலிருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் கண் விழிந்து விட்டார் என்ற செய்தி வெளியானது. இதனால் அனைவரும் சற்றே நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால் நேற்று மாலை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா  தொற்றுக்காக எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில், செயற்கை சுவாசக் கருவிகளுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளது. எஸ்.பி.பி. உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. எஸ்.பி.பி. உடல்நிலை தேறிவருவதாக கூறப்பட்ட நிலையில், மீண்டும் கவலைக்கிடம் என மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை குடும்பத்தாரையும், திரையுலகினரையும், ரசிகர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், எஸ்.பி.பி. பாலசுப்ரமணியம் உடல் நலம் பெற வேண்டிய பாரதிராஜா கண்ணீர் மல்க உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,  “எஸ்.பி.பி.பாலு எழுந்து வாடா. வாடா என அழைக்கும் உரிமையை எனக்கும் நீயும், உனக்கு நானும் கொடுத்து 50 ஆண்டுகள் ஆகிறது. பள்ளி நாட்களில் கூட என் நண்பர்களோடு இப்படி நான் பழகியது கிடையாது. உனக்கு நியாபகம் இருக்கிறதா? நீ ஒரு கார் வைத்திருந்தாய். அதை நீயே தான் ஓட்டிக்கொண்டு போவாய். அப்போது நானும் உடன் வருவேன். ஏன்? உனக்கு தூக்கம் வந்துவிடக்கூடாது என்பதற்காக கதை சொல்லிக்கொண்டே வருவேன்.  உன் வீட்டு உப்பு தின்னு வளர்ந்தவங்க டா? எங்களை விட்டு போக  எப்படிடா உனக்கு மனசு வரும். வராது டா. நீ திரும்ப வந்துடுவா என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. என்னுடைய 16 வயதிலேயே படத்தில் “செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா” பாடலை நீ தான் பாடியிருக்க வேண்டும். ஆனால் அன்னைக்கு உன் தொண்டை சரியில்ல, பாட முடியல. அதனால் தான் உன் இடத்தில் மலேசியா வாசுதேவனை வைத்து பாட வச்சேன். “நிழல்கள்” படத்தில் இது ஒரு பொன்மலை பொழுது பாடலை பாடினாய். பொன் மலை பொழுது பாடலை நீ பாடலாம்... ஆனால் உனக்கு பொன்மலை பொழுது வந்துவிடக்கூடாது. பொன் காலை பொழுது தான் வர வேண்டும். இரண்டு நாட்களாக உன்னை நினைத்து அழுது கொண்டிருக்கிறேன். நீ கண்டிப்பாக வந்துவிடுவாய். நான் வணங்கும் பஞ்ச பூதங்கள் உண்மை என்றால் நீ மறுபடியும் வருகிறாய். இன்னும் 1000 பாடல்களை பாடுகிறாய். நீ ஒரு ஆண் குயில்... வந்துடுடா பாலு எனக்கூறி கண்ணீர் விட்டு கதறியுள்ளார். இதோ அந்த வீடியோ... 

"