தீபாவளிக்கு ரிலீஸான விஜய், அட்லி கூட்டணியின் ‘பிகில்’படம் பல்வேறு சர்ச்சைகளை, குறிப்பாக அப்பட சீன்கள் 15க்கும் மேற்பட்ட படங்களிலிருந்து சுடப்பட்டவை என்ற விமர்சனங்களுக்கு இயக்குநர் காட்டமாக பதிலளித்துள்ளார். தான் பார்த்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட படங்களின் பாதிப்புகள் தன்னிடம் உள்ளதாகவும் விமர்சகர்கள் இஷ்டத்துக்கு சொல்வதற்கெல்லாம் தான் பதில் சொல்ல விரும்பவில்லை என்றும் உஷ்ணமாகியுள்ளார்.

கார்த்தியின் ‘கைதி’படத்துடன் ஒப்பிடப்பட்டு விஜயின் ‘பிகில்’படம் பலத்த விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. அதிலும் குறிப்பாக இயக்குநர் அட்லியை விமர்சகர்களும் வலைதள வாசிகளும் வச்சு செய்துவருகிறார்கள். முதல் படமான ராஜா ராணியில் துவங்கி பிகில் வரை மற்ற படங்களின் காட்சிகளை சுட்டே படம் எடுப்பதாக பலரும் அட்லியை கிழித்து தொங்கவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தனது விமர்சகர்களுக்கு காட்டமாக பதிலளித்துள்ள அட்லி,...நான் ஒவ்வொரு படத்தை பார்க்கும்போதும் அந்தப் படத்தால் கவரப்படுகிறேன். அப்படி ஒருவேளை நான் அங்கீகரிக்க வேண்டும் என்றால் என்னை கவர்ந்த 2 ஆயிரம் படங்களையும் நான் குறிப்பிட்டாக வேண்டும். என்னை ஆட்கொண்டவை பல, வெறும் சினிமா மட்டுமல்ல; நான் என்ன நினைக்கிறேன் என்றால் நீங்கள் ஒரு கதையை நேர்மையாக எழுதினால் போதும். வேறு வகையான படங்களை ஒப்பிட்டு பாதுகாப்பற்ற மனநிலையில் மக்கள் பேசுவார்கள். நான் நம்பிக்கையோடு தான் இருக்கிறேன். ஏனென்றால் இந்தப் படத்தின் கதை என்னுடையது. இவர்கள் குறிப்பிடும் படங்களை நானும் பார்த்திருக்கிறேன். நான் அதை விரும்பி இருக்கிறேன். ஆனால் அந்தப் படத்தின் பாதிப்பால் என் கதையை நான் எழுதவில்லை. அதனால் என் மீது தொடர்ந்து அவதூறு பரப்பிவரும் விமர்சகர்கள் குறித்து எனக்குக் கவலை இல்லை’என்று காட்டமாகப் பதிலளித்துள்ளார்.