நாளை ரிலீஸாகவுள்ள விய்யின் ‘பிகில்’படத்தை இயக்கியுள்ள அட்லி மிக விரைவில் சென்னை நகரின் காஸ்ட்லி ஏரியாவான போயஸ் கார்டனுக்கு குடியேறுகிறார். அப்பகுதியில் அவர் வாங்கியுள்ள மாபெரும் பங்களா திரையுலகினர் பலரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.

2013 ஆம் ஆண்டு வெளியான 'ராஜா ராணி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் அட்லி. அதற்கடுத்து விஜய் நடித்த ’தெறி’, ’மெர்சல்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்போது விஜய் நடித்திருக்கும் ’பிகில்’ படத்தையும் இயக்கியுள்ளார்.பிகில் மாபெரும் எதிர்பார்ப்புடன்  நாளை வெளியாகவிருக்கிறது. விஜய் படங்கள் வழக்கமாக சந்திக்கும் சோதனைகளை விட இப்படம் இன்னும் அதிக சோதனைக்கு ஆளாகியுள்ளது. இந்த நிமிடம் வரை படத்துக்கு அதிகாலை சிறப்புக்காட்சிகளுக்கான அனுமதி கிடைக்கவில்லை. இன்னொரு பக்கம் தனது ஒவ்வொரு படத்துக்கும் கதைத் திருட்டு சர்ச்சையில் மாட்டும் அட்லி இப்படத்திலும் அதற்குத் தப்பவில்லை.

இந்நிலையில் இதுவரை நான்கு படங்களை மட்டுமே இயக்கியுள்ள அட்லி, சுமார் இருபது கோடி மதிப்பில் ஒரு வீடு வாங்கியிருக்கிறாராம்.அதுவும் ரஜினி வீடு இருக்கும் போயஸ்கார்டன் பகுதியில் வாங்கியிருக்கிறாராம்.வாங்கிய வீட்டில் தரைப்பகுதி மற்றும் சில சுவர்களில் கிரானைட் கற்கள் பதிக்க மட்டும் இரண்டு கோடி செல்வழித்திருப்பதாகச் சொல்கிறார்கள். பல சில்வர் ஜூப்ளி படங்களை இயக்கியுள்ள இயக்குநர்களே சாதாரண சாலிகிராமம் பகுதியில் வசித்துவரும் நிலையில் அட்லி மிக காஸ்ட்லியான போயஸ்கார்டனில் வீடு வாங்கியிருப்பது திரையுலகினரை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.