திரையுலக பிரபலங்களைப் பார்ப்பதற்கு இனி ஷூட்டிங் ஸ்பாட் செல்வதற்குப் பதிலாக கமிஷனர் அலுவலகம் போய்க் காத்திருந்தால் சுலபமாக பார்த்துவிடலாம் என்கிற அளவுக்கு புகார் மனுக்களோடு தினமும் ஏகப்பட்ட பேர் படையெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இப்பட்டியலில் லேட்டஸ்டாக இடம்பெற்றிருப்பவர் ‘களவாணி’ புகழ் இயக்குநர் சற்குணம். கடந்த இரண்டு மூன்று வாரங்களாக தனது ‘களவாணி 2’ படம் தொடர்பாக கோர்ட் படிகளில் ஏறி சலித்துப்போனவர், நேற்று கமிஷனர் அலுவலகத்தில் தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது. பட ரிலீஸை போலி ஆவணங்கள் தயாரித்துத் தடுக்கிறார்கள் என்று புகார் கொடுத்திருக்கிறார்.

அப்புகாரில், விமலை கதாநாயகனாக வைத்து நான் தயாரித்துள்ள ‘களவாணி 2’ படத்தை, விமல் தயாரித்திருப்பதுபோல் ஆவணங்கள் தயாரித்து  தயாரிப்பாளர் சிங்காரவேலனும் விநியோகஸ்தர் கம்ரானும் என்னை மிரட்டுகிறார்கள். நடிகர் விமலுக்கும் அவர்களுக்கும் மத்தியில் உள்ள கொடுக்கல் வாங்கலில் தேவையில்லாமல் என் படத்தை முடக்கி எனக்குக் கோடிக்கணக்கில் நஷ்டத்தை உண்டாக்கப்பார்க்கிறார்கள்.

இது தொடர்பாக கோர்ட்டில் முறையிட்டு எனக்குச் சாதகமாக வந்த தீர்ப்புக்கு எதிராக போலி ஆவணங்களை உருவாக்கியதோடு நில்லாமல் தொடர்ந்து என் படத்தை வெளியிட விடாமல் மிரட்டுக்கிறார்கள். எனவே எனது பட நிறுவனத்துக்கும் எனக்கும் பாதுகாப்பு வழங்க ஆவன செய்யவேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார் சற்குணம்.