மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை உருவாக்க கோலிவுட் திரையுலகை சேர்ந்த பலர் முயற்சித்து வந்த நிலையில் இந்த முயற்சியில் தற்போது வெற்றியடைந்துள்ளார் இயக்குனர் ஏ.எல்.விஜய். அஜித், விஜய், பிரபுதேவா என பல முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி இவர் தொடர்ந்து வெற்றிப்படத்தை கொடுத்து வருகிறார். 

இவர் இயக்கியுள்ள 'லட்சுமி' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில். இந்த படத்தை தொடர்ந்து, முன்னால் முதலமைச்சரும், நடிகையுமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்க உள்ளார். 

தமிழ், தெலுங்கு, மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இந்த படத்தை வைப்ரி மீடியா என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதே நிறுவனம் தான் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவின் வாழ்க்கை வரலாறு படத்தை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஜெயலலிதாவின் திரையுலகம் மற்றும் அரசியல் வாழ்க்கை குறித்த இந்த படத்தின் கதையை இயக்குனர் விஜய் எழுத ஆரம்பித்துவிட்டதாகவும், திரைக்கதை எழுதி முடித்த பின்னர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகையின் தேர்வு நடைபெறும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ஜெயலலிதா கேரக்டரில் நடிக்க சில முன்னணி நடிகைகள் ஆர்வம் உள்ளதாக வெளிப்படியாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.