பட்டிமன்றத்தில் புகழின் உச்சியில் இருந்தபோது சினிமாவில் எண்ட்ரியாகி படுதோல்வி அடைந்து திரும்பிய திண்டுக்கல் லியோனியின் மகன் அவரது தந்தை வழியில் கோடம்பாக்கத்தில் கால்வைக்கிறார்.

இத்தகவலை அவரை தனது ‘மாமனிதன்’ படத்தில் அறிமுகப்படுத்தும் இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ‘தர்மதுரை’ படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி - சீனு ராமசாமி ‘மாமனிதன்’ படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்திருக்கின்றனர். படத்தில் விஜய் சேதுபதி ஆட்டோ டிரைவராக நடிக்கிறார். விஜய் சேதுபதி ஜோடியாக காயத்ரி நடிக்கிறார்.

இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா என மூன்று பேரும் இணைந்து இசையமைக்கும் இந்த படத்தை யுவன் ஷங்கர் ராஜா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார்.

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தின் மூலம் பிரபல நடிகரும், பேச்சாளருமான திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடிகராக சினிமாவில் அறிமுகமாவதாக இயக்குநர் சீனு ராமசாமி அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். லியோ சிவக்குமார் முறைப்படி நடிகர்கள் தேர்வில் பங்குபெற்று படத்தில் நடிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

1997ல் அருண்விஜய் குமார் ஹீரோவாக நடித்த ‘கங்கா கெளரி’ படத்தில் பரபரப்பான எதிர்ப்புகளுடன் அறிமுகமான திண்டுக்கல் லியோனி, சினிமாவில் கொஞ்சமும் எடுபடாமல் தோல்வி முகத்தோடு திரும்பினார். அப்பா லியோனி பறிகொடுத்த வெற்றியை மகன் லியோ கைப்பற்றுகிறாரா பார்ப்போம்.