விமர்சனம் ‘தில்லுக்கு துட்டு 2’...கொட்டம் அடிக்கும் மொட்டை ராஜேந்திரன்...
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராம்பாலாவின் இயக்கத்தில், சந்தானத்தின் நடிப்பில் வசூலில் செம துட்டு பார்த்த ‘தில்லுக்கு துட்டு’வின் பார்ட் 2 இது. பேய்க்கதையில் கொஞ்சம் காமெடியைக் கலந்துகட்டி முதல் கதையின் பாணியிலேயே உருவாக்கப்பட்டிருந்தாலும் இது முற்றிலும் வேறு கதை.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராம்பாலாவின் இயக்கத்தில், சந்தானத்தின் நடிப்பில் வசூலில் செம துட்டு பார்த்த ‘தில்லுக்கு துட்டு’வின் பார்ட் 2 இது. பேய்க்கதையில் கொஞ்சம் காமெடியைக் கலந்துகட்டி முதல் கதையின் பாணியிலேயே உருவாக்கப்பட்டிருந்தாலும் இது முற்றிலும் வேறு கதை.
முதல் பாகம் ஹிட்டு என்பதால் வேறு யாருக்கும் விட்டுக்கொடுக்காமல் இப்படத்தை ஹாண்ட்மேட் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் நடிகர் சந்தானமே தயாரித்திருக்கிறார். வழக்கமாக ‘ஐ லவ் யூ சொல்லும்போது அந்தப் பெண்ணே பேயாக மாறி அடிப்பதைக் குறியீடாக வைத்துக்கொண்டு, கூடவே ஒரு ஒரிஜினல் பேயும் இருந்தால் எப்படி இருக்கும் என்கிற சுவார்சியமான கற்பனைதான் கதை.
காலனி ஒன்றில் தனது கூட்டாளி மொட்டை ராஜேந்திரனுடன் குடியிருக்கும் சந்தானம் ஒரு மொடாக்குடியர். அவரது அளப்பரைகளால் மொத்தக் காலனியும் சிம்புவின் ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’ படம் பார்த்தால் எவ்வளவு அவஸ்தைப்படவேண்டுமோ அந்த அளவுக்கு அவஸ்தைப்பட்டுக்கொண்டிருக்கிறது.
இப்படி அவஸ்தைக்குள்ளானவர்களில் பட்டியலில் ஒருவராக இருக்கும் கார்த்திக் ஒரு மருத்துவமனையில் டாக்டராக இருக்கிறார். டாக்டர்களின் தொழில்தர்மப்படி தனது மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்க்கும் நாயகி ஷிரிதா சிவதாஸை ஒரு தலையாய் காதலிக்கிறார் கார்த்திக். இவர் ஒரு நாள் ஷிரிதாவிடம் தனது காதலைச் சொல்ல.. அந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் நாயகி பதறியடித்து ஓடுகிறார். கூடவே கார்த்திக்கையும் பத்திரமாக இருக்கும்படி சொல்கிறார்.
காரணம், நாயகிக்கு யாராவது ஐ லவ் யூ சொன்னாலோ.. அல்லது கல்யாணம் செய்துக்கலாமா என்று கேட்டாலோ ஒரு ஆவி வந்து அவர்களைப் புரட்டியெடுத்துவிடும். சமயத்தில் கொலையே செய்துவிடும். இதை அந்தப் பேயிடம் மிதிபட்டு, அடிபட்ட பின்பு புரிந்து கொள்ளும் டாக்டர் கார்த்திக் நாயகியை தன்னுடைய காலனிவாசிகளின் பரம எதிரியான சந்தானத்துடன் கோர்த்துவிடுகிறார். குவார்ட்டரும் கோழி பிரியாணியும் போல சந்தானத்துக்கு நாயகியைப் பார்த்தவுடன் பச்சக் என்று பிடித்துவிடுகிறது.
உடனே நாயகியை நோக்கி சந்தானம் ‘ஐ லவ் யூ’ சொல்ல.. ஆவி சந்தானத்தை புட்பால் விளையாடுகிறது. இதில் ஏதோவொரு வில்லங்கம் இருக்கிறது என்பதை அறியும் சந்தானம் இதற்காக நாயகியைத் தேடுகிறார். நாயகி தனது சொந்த ஊரான கேரளாவுக்கு போயிருப்பதை அறிந்து அங்கே ஓடுகிறார்.
நாயகியின் அப்பா அங்கே ஒரு மிகப் பெரிய பிராடு மாந்திரீகராக இருக்கிறார். அவருடனும் சண்டையிட்டு, மல்லுக் கட்டுகிறார் சந்தானம். இவரை எதிர்க்க அதே ஊரில் இந்த சாமியாருக்கு எதிராக இன்னொரு மாந்திரீக கடை போட்டு நடத்தும் ஊர்வசியையும் சந்தித்துப் பேசுகிறார்கள். இப்போது மூவருமே நாயகியைச் சுற்றி ஒரு பேய் சுற்றி வருவதை உணர்கிறார்கள். இந்தப் பேயிடமிருந்து நாயகியைக் காப்பாற்றி சந்தானத்திற்குத் திருமணம் செய்துவைக்க முயல்கையில் நடக்கும் கூத்துக்கள்தான் கிளைமேக்ஸ்.
இடையில் சற்று டல்லடித்த சந்தானத்துக்கு இந்த பார்ட் 2 ஒரு ரீ எண்ட்ரி என்று சொல்லுமளவுக்கு ஸ்கோர் பண்ணியிருக்கிறார் சந்தானம். அதிலும் மொட்டை ராஜேந்திரனுக்கும் அவருக்குமான கெமிஸ்ட்ரி அபாரம்.
ஹீரோயின் ஷிரதா சிவதாஸ் பார்க்கிறவர்களை அவ்வளவாக ஈர்க்காத ஆவ்ரேஜ் அழகி. ஆனால் தனது இயல்பான நடிப்பால் மனதில் இடம்பிடிக்கிறார்.ஆனால் படத்தில் சந்தானத்தையும் தாண்டி பெர்பார்மென்ஸில் பின்னியெடுத்திருப்பவர்கள் மொட்டை ராஜேந்திரனும், ஊர்வசியும். முதல் காட்சியில் ஒரு பீரோவை தெருவில் புரட்டியெடுத்தபடியே அறிமுகமாகும் மொட்டை ராஜேந்திரன் தனக்கு மனைவியிருப்பாதாகச் சொல்கிறார். ஆனால் கடைசிவரையிலும் அவரைக் காட்டவேயில்லை.
ஊர்வசியின் டைமிங் சென்ஸ் காமெடிக்கு போட்டி போட ஆளே இல்லை. இங்கேயும் அதே கதிதான். இடைவேளைக்கு பின்பு அந்த வீட்டுக்குள் இவர்கள் படும்பாடும், அதில் ஊர்வசியின் புலம்பலும் சிரிக்க வைக்கிறது. கதவை அந்தப் பக்கம் இருந்து மூடும் ஒரு காட்சியில் அதிகக் கைதட்டல்கள். இப்படி பல இடங்களில் பக்காவாக ஸ்கோர் செய்திருக்கிறார் இயக்குநர் ராம் பாலா.
ஷபீரின் இசையில் மூன்று பாடல்கள் ஒலிக்கின்றன. ’மவனே யார்கிட்ட’ பாடல் காட்சியிலேயே கதையையும் நகர்த்தியிருக்கிறார்கள். காதல் போல் பாடல் ஒரேயொரு டூயட்டாக ஆறுதலைத் தருகிறது. பின்னணி இசை பேயைத் தருவித்து அதுகூடவே நம்மையும் ஓட வைத்திருக்கிறது.
சந்தானத்துடன் கூடவே ஒட்டிப் பிறந்த இரட்டை அர்த்த வசனங்கள் வழக்கம்போல் சென்ஸாரின் ஆசிர்வாதத்துடன் படம் முழுக்க இருக்கின்றன. ஆனாலும் கொடுக்கிற துட்டுக்கு ஒர்த்து இந்தப் படம். சந்தானம் பழைய சந்தானமாய் வந்து சேர்ந்திருக்கிறார்.