பெட்ரோல், டீசல் இல்லாமல் போனால் 24 மணி நேரத்தில் உலகம் ஸ்தம்பித்துவிடும் என்று டீசல் படத்தின் பிரஸ்மீட்டில் அப்படத்தின் இயக்குநர் ஷண்முகம் முத்துசாமி தெரிவித்தார்.

Diesel Movie Story : டீசல் மாஃபியாவின் நிழல் உலக விளையாட்டுகளை மையமாகக் கொண்டு, ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'டீசல்' திரைப்படம் உருவாகி இருக்கிறது. ஒரு முழுமையான ஆக்‌ஷன் என்டர்டெய்னராக உருவாகியுள்ள இத்திரைப்படம் அக்டோபர் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 'பெட்ரோல், டீசல் இல்லாமல் போனால் 24 மணி நேரத்தில் உலகம் ஸ்தம்பித்துவிடும். இதுவரை யாரும் சொல்லாத டீசல் மாஃபியாவின் அறியப்படாத கதைகளை இந்தப் படத்தில் கூறியுள்ளோம்' என்று டீசல் படத்தின் பிரஸ்மீட்டில் இயக்குநர் ஷண்முகம் முத்துசாமி தெரிவித்தார்.

அதில் அவர் கூறியதாவது ''பெட்ரோல், டீசல் விலை ஒரு ரூபாய் உயர்ந்தால்கூட, ஒரு மாத வாழ்க்கைச் செலவில் பத்தாயிரம் ரூபாய் வரை மாற்றம் ஏற்படலாம். டீசல் திரைப்படம் பல ஆச்சரியங்களுடன் வருகிறது. நாம் சாலையோரக் கடைகளில் குளிர்பானங்கள் வாங்குவது போல பெட்ரோல், டீசல் கிடைக்கும் ஓர் இடம். அப்படி ஒரு கருவில் இருந்துதான் டீசல் கதை உருவாக்கப்பட்டது'' என்று இயக்குநர் கூறினார்.

டீசல் படத்தின் கதை

'ஆக்‌ஷன், டான்ஸ், ரொமான்ஸ், எமோஷன்ஸ் என அனைத்தும் கலந்த ஒரு முழுமையான ஆக்‌ஷன் என்டர்டெய்னர்தான் டீசல்' என்று நாயகன் ஹரிஷ் கல்யாண் கூறினார். இப்படத்தின் நாயகிகளான அதுல்யா ரவி மற்றும் அனன்யா ஆகியோரும் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றனர். ஷண்முகம் முத்துசாமி இயக்கிய 'டீசல்' படத்தை, தேர்ட் ஐ என்டர்டெயின்மென்ட் மற்றும் எஸ்.பி. சினிமாஸ் உடன் இணைந்து தேவராஜுலு மார்க்கண்டேயன் தயாரித்துள்ளார்.

வினய் ராய், சாய் குமார், கருணாஸ், போஸ் வெங்கட், ரமேஷ் திலக், காளி வெங்கட், விவேக் பிரசன்னா, சச்சின் கெடேகர், ஜாகிர் உசேன், தங்கதுரை, மாறன், கேபிஒய் தீனா, அபூர்வா சிங் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது. இப்படத்திற்கு எம்.எஸ். பிரபு மற்றும் ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இசை: திபு நினன் தாமஸ், கலை இயக்கம்: ரெம்போன், படத்தொகுப்பு: சான் லோகேஷ். இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆனதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.