சரியில்லாத ரோட்டுக்கு எதுக்கு காசு வாங்குறீங்க என சுங்கச்சாவடி ஊழியர்களுடன் டீசல் பட இயக்குனர் சண்முகம் முத்துச்சாமி வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
ஜிவி பிரகாஷ் நடித்த அடங்காதே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சண்முகம் முத்துச்சாமி. இவர் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த க/பெ ரணசிங்கம், ஜிவி பிரகாஷின் பென்சில் போன்ற படங்களில் எழுத்தாளராகவும் பணியாற்றி இருக்கிறார். இவர் இயக்கத்தில் தற்போது டீசல் என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் ஹரீஷ் கல்யாண் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அதுல்யா நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
இதனிடையே இயக்குனர் சண்முகம் முத்துச்சாமி டோல் கேட் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் சண்முகம் முத்துச்சாமி சென்னையில் இருந்து தேசிய நெடுஞ்சாலையில் தனது காரில் பயணித்துள்ளார். அப்போது புதுக்கோட்டை அருகே உள்ள பூதக்குடியில் அமைந்துள்ள டோல் கேட் நோக்கி வந்து கொண்டிருந்தபோது, சாலை குண்டும் குழியுமாக இருந்துள்ளது.
இதையும் படியுங்கள்... மகளுக்கு விரைவில் திருமணம்! 2-ஆவது குழந்தை பெற்றுக்கொள்ள ரெடி.. பட் இது தான் பிரச்சனை? ரோபோ ஷங்கர் ஓபன் டாக்!

இதனால் டென்ஷன் ஆன அவர் டோல் கேட்டில் உள்ள ஊழியர்களிடம் சாலை மோசமாக உள்ளதே இதற்கு ஏன் நான் காசு கொடுக்க வேண்டும் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதற்கு அந்த ஊழியர் அதெல்லாம் எங்களிடம் சொல்லக்கூடாது, நெடுஞ்சாலை ஆணையத்திடம் போய் கேளுங்க என சொல்ல, நீங்க தான் காசு வாங்குறீங்க உங்க கிட்ட தான் கேட்பேன் என இவரும் பதிலளிக்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.
அந்த சமயத்தில் எடுத்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள இயக்குனர் சண்முகம் முத்துச்சாமி., மோசமான சாலைக்கு நான் ஏன் சுங்க வரி கட்ட வேண்டும் என பதிவிட்டு மத்திய அமைச்சர் ஜேபி நட்டாவையும் டேக் செய்துள்ளார். அவரின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் சண்முகம் முத்துச்சாமி பதிவிட்ட இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... விஜய் தலையில விக் இருக்கானு பார்க்காதீங்க... சரக்கு இருக்கான்னு பாருங்க! தளபதி பற்றி பிரபலம் சொன்ன ஷாக் தகவல்
