கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன் ஆகியோர் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளது.

Dhruva Natchathiram release update : சில படங்களுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருப்பார்கள். இயக்குநர்-நடிகர் கூட்டணி, கதை, பாடல்கள் என பல காரணங்கள் இருக்கலாம். அப்படி கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமா ரசிகர்கள் காத்திருக்கும் ஒரு படம்தான் 'துருவ நட்சத்திரம்'. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நாயகனாக நடித்துள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டும் நிதி சிக்கல்களால் தள்ளிப்போனது. இதனால் கடந்த 9 ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் முடங்கிப் போய் உள்ளது.

துருவ நட்சத்திரம் ரிலீஸுக்கு ரெடி

இந்த நீண்ட காத்திருப்புக்குப் பிறகு 'துருவ நட்சத்திரம்' படத்தை வெளியிட கௌதம் மேனன் தயாராகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கௌதம் மேனனே இதை உறுதிப்படுத்தியுள்ளார். 'துருவ நட்சத்திரம்' இனி தள்ளிப்போகாது என்றும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் படத்தை வெளியிட முயற்சிப்பதாகவும் தெரிவித்தார். இதற்காக வேறு எந்த படத்திலும் நடிக்கவோ இயக்கவோ போவதில்லை என்றும் ரிலீஸுக்கான வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

கௌதம் மேனனின் பேட்டி வெளியானதும், இனி ரிலீஸ் தேதியை மாற்ற வேண்டாம், எங்களை ஏமாற்ற வேண்டாம் என்று விக்ரம் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 2013-ல் 'துருவ நட்சத்திரம்' படம் உருவாகிறது என்ற வதந்திகள் பரவியது. முதலில் இப்படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. அவரை வைத்து டெஸ்ட் ஷூட் நடத்தி போஸ்டரெல்லாம் வெளியிட்டனர். ஆனால் கதையில் திருப்தி இல்லாததால் அப்படத்தில் இருந்து விலகிவிட்டார் நடிகர் சூர்யா.

9 வருட காத்திருப்புக்கு பின் ரிலீசாகும் துருவ நட்சத்திரம்

பின்னர் சூர்யாவுக்கு பதிலாக விக்ரம் இப்படத்தில் இணைந்தார். இதையடுத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி 2016-ல் படப்பிடிப்பு தொடங்கியது. இடையில் பல காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. நிதி நெருக்கடி காரணம் என்று கூறப்படுகிறது. 2023-ல் படம் வெளியாகும் என்று கடைசியாக கௌதம் மேனன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஆனால் அது நடக்கவில்லை. கடந்த ஆண்டும் இப்படத்தை ரிலீஸ் செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதுவும் சொதப்பியது. இதையடுத்து ஒன்பது வருடங்களுக்குப் பிறகு 'துருவ நட்சத்திரம்' படம் இந்த ஆண்டு நிச்சயம் வெளியாகும் என கூறப்படுகிறது.