விஸ்வரூபம் முதல் துருவ நட்சத்திரம் வரை.. வெளியாவதில் சிக்கல் - பெரும் போராட்டத்தை சந்தித்த கோலிவுட் படங்கள்!
Kollywood Movies : ஒரு திரைப்படம் என்பது பூஜை போடப்பட்ட நாளிலிருந்து அது திரையில் வெளியாகும் நாள் வரை பல்வேறு தடைகளை தாண்டித்தான் திரையரங்குகளை அடைகிறது. அந்த வகையில் பல்வேறு இன்னல்களை சந்தித்து திரையரங்கில் வெளியான சில திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
Maanaadu
மாநாடு
சர்ச்சைக்கு பெயர் பெற்ற நடிகர்களில் ஒருவர் தான் சிம்பு, வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பில் கடந்த நவம்பர் 2021ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு பூஜை போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சிம்பு சரியாக கால்ஷீட் கொடுக்கவில்லை என்று கூறி இந்த படம் தொடர்ச்சியாக தடைபட்டு வந்தது. பிறகு சுரேஷ் காமாட்சிக்கும், சிம்புவிற்கும் இடையே சமரசம் பேசப்பட்டு, சுமார் மூன்று ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு இந்த திரைப்படம் வெளியானது.
Vaalu
வாலு
விஜய் சந்தர் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் வாலு. இந்த திரைப்படத்திற்கு நடிகர் சிம்பு சரியாக கால்ஷீட் கொடுத்திருந்த பொழுதிலும், தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்பட்ட சில நிதி நெருக்கடிகள் காரணமாக சுமார் 3 ஆண்டுகள், பல தடைகளை சந்தித்து இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. வியாபார ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இந்த திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது.
Kavalan
காவலன்
பிரபல நடிகர் தளபதி விஜய் அவர்கள் இயக்குனர் சித்திக் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய திரைப்படம் தான் காவலன். மலையாளத்தில் வெளியான "பாடி கார்ட்" என்கின்ற திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இந்த படம் வெளியானது. கடந்த 2011 ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பொங்கலுக்கு வெளியான இந்த திரைப்படம் சில நிதி நெருக்கடிகளை சந்தித்ததன் காரணமாக முன்பு அறிவிக்கப்பட்ட தேதியில் வெளியாகாமல் ஒத்திவைக்கப்பட்டு பொங்கலுக்கு வெளியானது குறிப்பிடத்தக்கது.
Vishwaroopam
விஸ்வரூபம்
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் சில சர்ச்சைகளின் காரணமாக தொடர்ச்சியாக அதன் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தமிழக அரசே ஒரு படத்தை வெளியிட தடை விதித்து சுமார் ஒரு மாத கால போராட்டத்திற்கு பிறகு கடந்த 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் கமல்ஹாசனின் விஸ்வரூபம். இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்த படத்தில் பல காட்சிகள் அமைக்கப்பட்டு இருப்பதாக அப்பொழுது புகார் எழுந்தது.
Dhruva Natchathiram Release
துருவ நட்சத்திரம்
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் பிரபல நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தான் துருவ நட்சத்திரம். சுமார் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. நேற்று நவம்பர் 24ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் இந்த திரைப்படம் வெளியாக இன்னும் சில நாட்கள் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.