இந்தி திரையுலக ஜாம்பவான்களான இர்ஃபான் கான், ரிஷி கபூர் ஆகியோரின் திடீர் மரணத்தால் ஏற்பட்ட சோகத்தில் இருந்து பாலிவுட் உலகம் மெல்ல மீண்டு வரும் இந்த சூழ்நிலையில், இளம் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

2012ம் ஆண்டு வெளியான Kai Po Che என்ற படம் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானார். கடைசியாக இவரது நடிப்பில் 2019ம் ஆண்டு இந்தியில் வெளியான சிச்சோர் என்ற படம் மூலம் பிளாக் பஸ்டர் வெற்றியடைந்தது. ஷ்ரத்தா கபூருடன் இணைந்து நடித்த சுஷாந்தின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய ஹிட்டடித்ததைத் தொடர்ந்து பாலிவுட்டின் ஹீரோவாக வலம் வர ஆரம்பித்தார் சுஷாந்த் சிங் ராஜ்புத். 

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட 'MS Dhoni: The Untold Story' படத்தில் எம்.எஸ்.தோனியாக நடித்தார். இந்த படத்தின் மூலம் கிடைத்த வெற்றி சுஷாந்த் சிங்கை இந்தியில் மட்டுமின்றி, தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகம் செய்து வைத்தது. பாலிவுட்டில் வெற்றிகளை குவிக்க ஆரம்பித்திருந்த  சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பந்த்ராவில் உள்ள தனது இல்லத்தில் சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

சுஷாந்தின் உடலைக் கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளார். தற்கொலைக்கான காரணம் குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை. கபூர் குடும்பத்தைச் சேர்ந்த ரியா கபூர் என்பவரை சுஷாந்த் சிங் காதலித்து வந்ததாக வதந்தி பரவியது.சில நாட்களுக்கு முன்பு இவரிடம் மேனேஜராக பணியாற்றி வந்த திஷா சேலியன் என்பவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.