மும்பையில் ஒருவாரத்துக்கு முன்பு  படப்பிடிப்பு தொடங்கி நடந்து வரும் ரஜினி, ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியின் ‘தர்பார்’ படத்தின் மெயின் வில்லன் குறித்த தகவல் முதல் முறையாக வெளியாகியுள்ளது.

பிரதீக் பாப்பர் பாலிவுட் வட்டாரத்தில் மிகவும் பிரபலமான பெயர். தேசிய விருதுபெற்ற நடிகையான ஸ்மிதா பாட்டீல், ராஜ்பப்பர் தம்பதியின் மகனான இவர் 2008ல் ‘ஜானே தூ’ படத்தின் மூலம் அறிமுகமாகி இந்தியின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அமீர் கான் தயாரிப்பில் வெளியான ‘தோபி காட்’,’தம் மாரோ தம்’, ‘மை ஃப்ரண்ட் பிண்டோ’ உடபட ஒரு டஜனுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் பிரதீக் இதுவரை வேற்றுமொழிப் படங்களில் அறிமுகமாகவில்லை.

இந்நிலையில் ‘தர்பார்’ படத்தின் மெயின் வில்லனாக அதிகாரபூர்வமாக கமிட் ஆகியிருக்கும் பிரதீக் தனது தமிழ்ப் பட அறிமுகம் குறித்து கூறுகையில்,”ரஜினி போன்ற ஒரு சகாப்த நடிகருடன் நடிக்க துடியாய்த் துடித்த்துக்கொண்டிருக்கிறேன். இப்படத்துக்காக நான் எனது 200 சதவிகித உழைப்பைக் கொட்டுவேன்” என்று பரவசமடந்திருக்கிறார்.

பிரதீக் குறித்து இன்னொரு சுவாரசியமான செய்தி ‘2.0’ படத்தில் ரஜினியின் காதலியான எமி ஜாக்‌ஷனும் பிரதீக்கும் சில ஆண்டுகளுக்குமுன் மிகத் தீவிரமாகக் காதலித்து வந்தனர். திருமணத்தை நோக்கிச் சென்ற அந்தக் காதல் ஒரே ஆண்டில் முறிவுக்கு வந்தது.