மும்பையில் நடந்து வரும் ரஜினி, ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியின் ‘தர்பார்’ படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட ஸ்டில்கள் தொடர்ந்து இணையங்களில் பதியப்பட்டு வைரலாகி வருவதால் படக்குழுவும் இயக்குநர் முருகதாசும் டென்சனாகியுள்ளனர்.

‘தர்பார்’ படத்தின் முதல் ஷெட்யூல் கடந்த 10ம் தேதியன்று தொடங்கி பரப்பாக நடந்து வருகிறது. தேர்தலில் வாக்களிப்பதற்காக ரஜினி ஒருநாள் மட்டும் ஓய்வெடுத்துவிட்டு இடைவிடாமல் தொடர்ந்து நடித்துவருகிறார். 10ம் தேதியிலிருந்தே நயன் தாராவும் நடித்து வருகிறார் என்று செய்திகள் வந்த நிலையில் அவர் இன்று முதல் கலந்து கொண்ட செய்தியையும் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.

இந்நிலையில் கடும் கெடுபிடிக்கிடையிலும் ‘தர்பார்’ ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்கள் தொடர்ந்து இணையங்களில் பகிரப்பட்டு பரவலாகி வருகின்றன. இரு தினங்களுக்கு ரஜினி படப்பிடிப்பு தளத்தில் காரில் காத்திருந்த ஸ்டில்கள் வெளியான நிலையில் இன்று சற்றுமுன்னர் கருப்பு ஜீன்ஸ், பிரவுன் சட்டை அணிந்து கும்பிட்டபடியே ஒரு வணிக வளாகத்துக்குள் நுழையும் சில படங்கள் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றன.

படப்பிடிப்பு தளத்துக்கு நுழைவதற்கு பயங்கர கெடுபிடிகள் இருப்பதால் படத்தில் பணிபுரிபவர்களில் ஒருவர் தொடர்ந்து இக்காரியத்தில் ஈடுபட்டுவருவதாகத் தெரிகிறது. இதற்கான கடும் கண்டனங்களை இயக்குநர் முருகதாஸின் ட்விட்டர் பக்கத்தில் மிக விரைவில் எதிர்பார்க்கலாம்.