‘தர்பார்’ படத்தின் இரண்டாவது ஷெட்யூல் நாளை மும்பையில் தொடங்குவதாக இருந்த நிலையில் மோடியின் பதவியேற்பு விழாவில் ரஜினி கலந்துகொள்ளவிருப்பதால் படப்பிடிப்பு ஓரிரு நாட்கள் தள்ளிப்போகும் என்று தெரிகிறது.

சென்னை, தனது போயஸ் கார்டன் இல்லத்தில் சற்றுமுன்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ரஜினி,”மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்ள இருக்கிறேன். கோதாவரி -கிருஷ்ணா -காவேரி நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கருதுகிறேன். தோல்வியால் காங்கிரஸ் தலைவர் பதவி விலக தேவையில்லை. கட்சி தொடங்குவது குறித்து ஏற்கனவே நான் அறிவித்து இருந்தேன். 

கட்சி ஆரம்பித்து 14 மாதங்களில் கமல் கட்சி மக்களவையில் கனிசமான வாக்குகள் பெற்றுள்ளது பாராட்டத்தக்கது. கோதாவரி -காவிரி இணைப்பு திட்டத்தை அறிவித்த நிதின் கட்கரிக்கு வாழ்த்துகள்’என்று தொடங்கி நீண்ட நேரம் பேட்டி அளித்தார். இதன் மூலம் தான் டெல்லி செல்வதையும் ரஜினி உறுதி செய்ததால் மும்பையில் நாளை தொடங்குவதாக உள்ள’தர்பார்’படப்பிடிப்பில் கலந்துகொள்ளமாட்டார் என்று தெரிகிறது. ரஜினி டெல்லியிலிருந்து திரும்பியவுடன் படப்பிடிப்பு தொடங்குமா அல்லது ஓரிரு நாட்களுக்கு அவர் இல்லாத காட்சிகள் படமாக்கப்படுமா என்பதை தயாரிப்பு நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.