கடுமையான போலீஸ் கட்டுப்பாட்டையும் படப்பிடிப்பு குழுவினரின் கண்காணிப்பையும் மீறி ‘தர்பார்’பட காட்சிகள் வலைதளங்கலில் தொடர்ந்து வைரலாவதால் ரஜினி, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் படக்குழுவினர் பயங்கர அப்செட்டாகியுள்ளனர்.

முதல் இரண்டு ஷெட்யூல்கள் மும்பையில் முடிந்துள்ள நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படப்பிடிப்பு வட இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இதில் ரஜினிகாந்த் போலீஸ் ஐ.பி.எஸ். அதிகாரியாக நடிப்பதை உறுதிப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் மீண்டும் மீண்டும்  தர்பார் படப்பிடிப்பு காட்சிகள் சமூக வலைத்தளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகி படக்குழுவினருக்கு தலைவலியை ஏற்படுத்தி வருகின்றன. 

படம் துவங்கிய சமயத்தில் ரஜினிகாந்துக்கு போலீஸ் சீருடை அணிவித்து ஸ்டூடியோவில் வைத்து ‘போட்டோ சூட்’ நடத்திய புகைப்படம் இணையதளத்தில் வெளியானது. அதன்பிறகு மும்பை ஷெட்யூல்களில்  ரஜினிகாந்த், யோகிபாபு ஆகியோர் கிரிக்கெட் விளையாடுவது, நயன்தாரா நடந்து வருவது போன்ற காட்சிகள் வெளிவந்தன. இதைப் பார்த்த சிலர் படப்பிடிப்பு முடியும் முன்பே அனைத்துக் காட்சிகளும் இப்படி சமூக வலைத்தளத்தில் வந்துவிடும் என்று மீம்ஸ் போட்டனர். இது இயக்குநர் முருகதாஸை எரிச்சலடைய வைத்தது.

இதைத்தொடர்ந்து படப்பிடிப்பை சுற்றிலும் பாதுகாப்பை வலுப்படுத்தினர். செல்போன் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டது. பார்வையாளர்களும் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் இத்தனை கடும் பாதுகாப்பையும் மீறி ஜெய்ப்பூரில் உள்ள பின்க் நகரில் தற்போது நடந்து வரும் தர்பார் படப்பிடிப்பு காட்சிகளை திருட்டுத்தனமாக படம்பிடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். இதில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரி தோற்றத்தில் கார் அருகே நிற்கிறார். அவர் பக்கத்தில் நயன்தாராவும் நின்று கொண்டிருக்கிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அது மட்டுமின்றி இப்படப்பின் சில காணொளிகளையும் சிலர் யூடுயுப்பில் பகிர்ந்து வருகின்றனர். இதே லொகேஷனில் இன்னும் 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்தவேண்டியிருப்பதால் இப்படி திருட்டுத்தனமாக படம் எடுப்பவர்களை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் குழம்பி வருகிறது படக்குழு.