நீண்ட நெடுங்காலமாக நடந்துவரும் நடிகர் தனுஷின் வாரிசுப் பஞ்சாயத்து இப்போதைக்கு ஒரு முடிவுக்கு வருவது போல் தெரியவில்லை. கோர்ட்டில் தனுஷ் சமர்ப்பித்த பிறப்பு மற்றும் கல்விச் சான்றிதழ்கள் அத்தனையும் போலியானவை என்று தனுஷால் போலியான பெற்றோர் என்று குற்றம் சாட்டப்படுபவர்கள் கூறியுள்ளனர்.

மதுரை மாவட்டம், மேலூரை சேர்ந்தவர் கதிரேசன். இவர், நடிகர் தனுஷை தனது மகன் என்றும், தனக்கு மாதந்தோறும் அவர் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும் மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த மேலூர் நீதிமன்றம், தனுஷ் நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இந்த உத்தரவிற்கு தடை விதிக்கவும்,  வழக்கை ரத்து செய்யவும் கோரி, ஐகோர்ட் மதுரை கிளையில் கடந்தாண்டு நடிகர் தனுஷ் மனு செய்தார். விசாரணையின் போது நடிகர் தனுஷ் ஆஜரானார். 

அப்போது மருத்துவக்குழுவினர், தனுஷின் அங்க அடையாளங்களை பரிசோதித்து அறிக்கை தாக்கல் செய்தனர். இதையடுத்து மேலூர் நீதிமன்றத்தில் கதிரேசன் தொடர்ந்த வழக்கை ரத்து செய்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. இந்த வழக்கில், நடிகர் தனுஷ் தனது பிறப்பு மற்றும் கல்விச்சான்றிதழ்களை போலியாக தயாரித்து தாக்கல் செய்துள்ளார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரி கதிரேசன் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவும் கடந்தாண்டு மார்ச் 23ல் தள்ளுபடியானது.  இதன்பிறகு, கதிரேசன் மீண்டும் ஒரு மனு செய்தார். 

அதில், மதுரை கோ.புதூர் மற்றும் மதுரை போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகாரின் மீது குற்றவியல் சட்டப்படி போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், உரிய கீழ் நீதிமன்றத்தில் மனு செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து கதிரேசன், மதுரை ஜேஎம் 6 நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், வாரிசு உரிமை தொடர்பான வழக்கில் நடிகர் தனுஷ், ஐகோர்ட் கிளையில் போலியான ஆவணங்கள் தாக்கல் செய்துள்ளார். எனவே, அவர் மீது  வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். 

இந்த மனுவை நேற்று விசாரித்த மாஜிஸ்திரேட் (பொ) சாமுண்டீஸ்வரி பிரபா, மனு குறித்து நடிகர் தனுஷ் மற்றும் போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை பிப்.13க்கு தள்ளி வைத்தார். தனுஷுக்கு தலைவலி தொடர்கிறது...