தனது 36 வது பிறந்தநாளை ஒட்டி பிரபலங்களின் வாழ்த்து மழையில் நனைந்துவரும் தனுஷ் மிக விரைவில் பிரபல இந்தி நடிகர் ஹ்ரித்திக் ரோஷனுடன் இணைந்து தனது மூன்றாவது இந்திப்படத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

1983ம் ஆண்டு ஜூலை 28ம் தேதி பிறந்த தனுஷ் இன்று தனது 36 வது பிறந்தநாளை ரசிகர்களுடன் இணைந்து கொண்டாடி வருகிறார். அவ்விழாவில் தனுஷ் ரசிகர்கள் ரத்த தானம் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் தனுஷ் இந்திப் படம் ஒன்றில் ஹிர்த்திக் ரோஷன், சாரா அலிகான் ஆகியோருடன் நடிக்க இருக்கிறார் என்கிற செய்தியை அவரது ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் உறுதி செய்தார்.

இந்தியில், ஏற்கனவே ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ராஞ்ஜனா (Raanjhanaa) என்ற படத்தில் நடித்திருந்தார் தனுஷ். அவருக்கு  ஜோடியாக சோனம் கபூர் நடித்திருந்தார். விமர்சகர்களால் அதிகம் சிலாகிக்கப்பட்ட இந்தப் படம், தனுஷூக்கு இந்தியிலும் பெயர் வாங்கித் தந்தது. இதையடுத்து பால்கி இயக்கத்தில் அமிதாப்பச்சனுடன் ’ஷமிதாப்’என்ற இந்திப் படத்தில் வாய் பேச முடியாதவராக நடித்தார். அவருடன் அக்க்ஷரா ஹாசன் நடித்திருந்தார். இந்தப் படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படங்களுக்குப் பிறகு அவர் எவ்வளவோ அழைப்புகள் இருந்தாலும்  இந்தியில் நடிக்கவில்லை. தமிழிலேயே கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில், அவர் மீண்டும் இந்தி படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தை ’ராஞ்ஜனா’படத்தை இயக்கிய ஆனந்த்.எல்.ராய் இயக்குகிறார். இதில் தனுஷூடன் ஹிர்த்திக் ரோஷன் மற்றொரு ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக சாரா அலிகான் நடிக்கிறார். இந்தப் படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.