நடிகர் தனுஷ் நடித்து வரும் அடுத்த திரைப்படத்தின் அவரது கதாபாத்திரத்தின் புகைப்படம் வெளியாகியிருக்கிறது.
Dhanush Tere Ishk Mein Movie
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் 2002-ம் ஆண்டு வெளியான ‘துள்ளுவதோ இளமை’ என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் பல நல்ல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான திரைப்படம்’ ராயன்’. இது தனுஷின் ஐம்பதாவது திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை தனுஷே இயக்கி இருந்தார்.
தனுஷ் கைவசம் வைத்திருக்கும் திரைப்படங்கள்
தற்போது ‘குபேரா’, ‘இட்லி கடை’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘இட்லி கடை’ படத்தை அவரே இயக்கி தயாரித்தும் வருகிறார். இது மட்டுமில்லாமல் ‘குபேரா’ படத்திலும், தனது 56-வது படம் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். ‘இட்லி கடை’ திரைப்படம் அக்டோபர் ஒன்றாம் தேதி வெளியாக உள்ளது. அதைத் தொடர்ந்து இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி வரும் ‘குபேரா’ படம் வருகிற 20-ஆம் தேதி வெளியாக உள்ளது. அடுத்தடுத்த படங்கள் வெளியாக உள்ளதால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
‘தேரே இஷ்க் மெய்ன்’ திரைப்படம்
தற்போது அவர் ஹிந்தி படமான ‘தேரே இஷ்க் மெய்ன்’ என்கிற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை ‘ராஞ்சனா’ மற்றும் ‘அட்ராங்கி ரே’ போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் டில்லி, பனாரஸ் ஆகிய பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் கதாநாயகியாக பிரீத்தி சனோன் நடக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் ஹைதராபாத், மும்பை ஆகிய பகுதிகளில் எடுக்கப்பட்டு வருகிறது. காதலை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த படத்தில் பெரும்பாலான காட்சிகள் கல்லூரியில் எடுக்கப்பட்டுள்ளது.
விமானப்படை அதிகாரியாக நடிக்கும் தனுஷ்
முன்னதாக படத்தின் படப்பிடிப்பு ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியில் நடைபெற்றபோது தனுஷ் கல்லூரி வளாகத்தில் நடித்த பல காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின. இந்த நிலையில் தற்போது ‘தேரே இஷ்க் மெய்ன்’ படத்தில் தனுஷின் கெட்டப் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பில் இருக்கும் தனுஷ், இந்திய விமானப்படை சீருடையில், தாடி இல்லாமல், மீசையுடன் விமானப்படை அதிகாரி போன்ற தோற்றத்துடன் காட்சி தருகிறார். இதனால் தனுஷ் விமானப்படை அதிகாரியாக இந்த படத்தில் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்றாவது முறையாக இணையும் ஆனந்த் எல் ராய் - தனுஷ் கூட்டணி
இயக்குனர் ஆனந்த் எல் ராயுடன் தனுஷ் இதற்கு முன்பாக 2013-ம் ஆண்டு வெளியான ‘ராஞ்சனா’ (தமிழில் அம்பிகாபதி) 2021-ம் ஆண்டு வெளியான ‘அட்ராங்கி ரே’ (தமிழில் கலாட்டா கல்யாணம்) ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார். தற்போது தனுஷை மூன்றாவது முறையாக ஆனந்த் எல் ராய் இயக்கி வருகிறார்.
